நோயாளிக்கு மருத்துவரைப் பிடிக்கவேண்டுமா?
சமீபத்தில் நண்பர் ஒருவரை பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் முன்பு மருத்துவக் கல்லூரியில் மாணவராக இருந்த போது அதே கல்லூரியில் பணியாற்றி வந்த எனக்கு பழக்கமானவர். இப்போது இங்கிலாந்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். ஒவ்வொறு முறை இந்தியா வரும்போதும் என்னை நிச்சயமாக சந்தித்துவிட்டுத் தான் போவார். நாங்கள் சந்தித்தால் பல தலைப்புகளில் பேசுவது வழக்கம். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பதிலிருந்து தொடங்கி, வாழ்க்கையின் அர்த்தம் குறித்த தத்துவ ஞானம் வரையில் எல்லா விஷயங்களும் அதில் அடங்கும். ஒரு காபி கடையில் அமர்ந்து பேச ஆரம்பித்து, அங்கிருந்து அப்படியே நடந்துகொண்டே பேசி, இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டே பேசி, அப்படியே ஆட்டோவில் ஏறி அவரை விமான நிலையத்தில் விடும் பாதி தூரம் வரை பேசிக்கொண்டே சென்றோம். ஏன் பாதி தூரம் என்றால், இடையில் என் வீடு வந்துவிட்டது. அப்படி இல்லை என்றால் இன்னும் பேசிக்கொண்டே போயிருப்போம். அவருடைய மருத்துவ அனுபவங்களை அவர் பகிர்ந்தார். உலகப் புகழ் வாய்ந்த மாபெரும் நிபுணர்களுடன் பணி புரியும் அனுபவங்களை அவர் கூறும்போது வியப்பாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன் எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. என்னுடன் கிராமப்புற மருத்துவப் பணிக்கு ஞாயிறுகளில் கல்லூரி விடுமுறை இருக்கும்போது வருவார். சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை இரயிலில் செல்லும்போதும், திரும்ப சென்னை வரும்போதும் அந்த 1.5 மணி நேர பயணத்தில் வாழ்கையின் பல விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். அன்று நாங்கள் பேசியது அந்த நாள் நினைவுகளைக் கொண்டுவந்தது.
நாங்கள் பேசிய ஒரு விஷயம் என்னை ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. நோயாளிக்கு மருத்துவரைப் பிடிக்கவேண்டியது எவ்வளவு அவசியம்? மருத்துவரிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிக்கு அவரைப் பிடித்தல், அவர் மீது மரியாதை இருத்தல் ஆகியவை அவர் மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அவர் மீது ஏற்படும் நம்பிக்கை அவர் சொல்லும் சிகிச்சை முறைகளைப் பின்பற்ற நோயாளியை ஊக்குவிக்கிறது. மருத்துவரைப் பிடிக்கவேண்டியது அவசியமா? பிடிப்பது என்பது ஒரு தனிநபர் உறவு முறை அல்லவா? தனிப்பட்ட விதத்தில் எதற்கு மருத்துவரைப் பிடிக்க வேண்டும்? சிகிச்சை பெறுவதற்காக ஒரு சில மணி நேரங்களே செலவிடும் ஒரு மருத்துவரை நோயாளிக்கு எப்படி பிடிக்கும்? அப்படிப்பட்ட பிடிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லையே. அவர் அளிக்கும் சிகிச்சை வேலை செய்து உடல் நலம் தேரிவிட்டாலே போதுமே. நோயாளிக்கும் மருத்துவருக்கும் உள்ள உறவு உடல் நலம் தேருவது வரை மட்டும் அந்த வரம்புக்குள் இருந்தால் போதுமே. அதைத் தாண்டி நட்பு, உறவு, பிடிப்பது, பிடிக்காமல் போவது இதெல்லாம் எதற்கு? தொழில் முறை உறவு வைத்துக்கொள்ளவேண்டும், ஒரு கோடு ஒன்றை வரைந்து அதைத் தாண்டி தனி நபர் விஷயங்களுக்குள் நுழையக் கூடாது என்று தானே மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தருகிறார்கள். இப்படி எங்கள் வாதம் தொடர்ந்தது. இன்று மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது நடந்த ஒரு சம்பவம் இந்த விவாதத்தை எனக்கு நினைவூட்டியது.
கடந்த 2 மாதங்களாக, 70 வயது நிறைந்த மூதாட்டி ஒருவர் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்காக என்னிடம் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் என்னைப் பார்க்க வந்த முதல் நாள் எனக்கும் இன்னும் நினைவில் உள்ளது. மிகவும் சோகமாக, தலை வாரி முடிக்காமல், குளிக்காமல், நெற்றியில் குங்குமம் கலைந்த நிலையில் வாழ்க்கையில் எந்த பற்றும் இல்லாத ஒருவர் போல், முகத்தில் சோகமே வடிவாக வந்து என் முன் அமர்ந்தார். அவருடைய மகள் அவரை அழைத்து வந்திருந்தார். மகள் தான் என்னுடன் பேசினார். அந்த அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் பல கேள்விகள் கேட்டும், அவருடன் பேச முயற்சி செய்தும் அவர் என்னுடன் பேசவே இல்லை. என் கண்களைக் கூட அவர் பார்க்கவில்லை. எதிலும் ஆர்வம் இல்லாமல் சோகமாக, சோர்வாக அப்படியே அமர்ந்திருந்தார். நான் விடாமல் அவருடன் பேச முயற்சி செய்துகொண்டே இருந்தேன். எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோய்க்கும், உயர் இரத்த அழுத்தத்திற்கும் மாத்திரைகள் கொடுத்துவிட்டு, அவருக்கு என்ன சாப்பிடவேண்டும், சாப்பிடக்கூடாது என்று எடுத்துக் கூறிவிட்டு, அவருடன் ஆதரவாகப் பேசி அனுப்பினேன். பதினைந்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் மாத்திரைகள் வாங்க அந்த அம்மாவும் அவரின் மகளும் வந்தனர். இந்த முறையும் அதே சோகமான தோற்றம், சுய பராமரிப்பில் கவனம் இல்லாத நிலை. பேச முயன்றேன் முடியவில்லை. இம்முறை அவருடைய மகள் எனக்கு தன் அம்மாவின் நிலையைப் பற்றி கூற ஆரம்பித்தார்.
“கொரோனா வந்தபோது அம்மாவுக்கு ரொம்ப சீரியசா காய்ச்சல் சளி மூச்சுத் திணறல் வந்துடுச்சி. அவங்களை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில சேர்த்துட்டோம். எங்க யாரையும் அவங்க கிட்ட விடவே இல்லை. அம்மா ரொம்ப பயந்து போயிட்டாங்க. தனியா 20 நாள் இருந்து, யமனோட போராடி பிழைத்து வந்தாங்க. அப்படி வந்ததிலிருந்து அம்மா இப்படித் தான் இருக்காங்க.” என்றார். “ஒண்ணுமே ஒழுங்கா சாப்பிட மாட்டேங்கிறாங்க. குளிக்க பயப்படுறாங்க. தூங்குறதும் இல்லை. எப்பவும் தனியா உட்கார்ந்து அழுதுக்கிட்டே இருக்காங்க.” என்றார். அந்த அம்மாவுக்கு மனச் சோர்வு இருக்கும் என்று தோன்றியது. கொரோனா சமையத்தில் பலருக்கு அதிக மன பாதிப்புகள் ஏற்பட்டது. அதில் பலர் அந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்துவிட்டனர். சிலர் இன்னும் கூட அந்த பயம், பதட்டம், படபடப்பால் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மன ரீதியான சிகிச்சை தேவைப்படுகிறது. “அம்மாவுக்கு தமிழ் தெரியாது. நாங்க தெலுங்கு காரங்க. இங்க வந்து 10 வருஷத்துக்கு மேல ஆகுது, ஆனா அம்மா மட்டும் தமிழ் கத்துக்கவே இல்லை. வெளியல்லாம் போக மாட்டாங்க, யாரு கூடவும் பழக மாட்டங்க. அப்படியே இருந்துட்டாங்க” என்றார் அவரின் மகள். அந்த அம்மாவின் பிரச்சனை எனக்குப் புரிய ஆரம்பித்தது. தனிமை, மனம் விட்டு பேச யாரும் இல்லாத நிலை, இதில் கொரோனா தொற்று மற்றும் அது சம்மந்தப்பட்ட மனச் சோர்வு, இவை எல்லாம் அவரை வதைத்துக்கொண்டிருந்தது.
அவரிடம் சென்று அவரைப் பார்த்து அமர்ந்து கொண்டேன். எனக்கு சரளமாக தெலுங்கு பேசத் தெரியாது. ஆனால் ஒவ்வொறு வார்த்தை தெரியும். எனக்குத் தெரிந்த உடைந்த தெலுங்கில் அவரிடம் பேச முயற்சி செய்தேன். “அம்மா, மீரு பாக உன்னாரா? போன் சேஸ்தாரா?” (நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? சாப்பிட்டீர்களா?) என்று மட்டும் தான் கேட்டேன். அதுவும் சரியான இலக்கணமா என்று கூட தெரியாது. கேட்ட மாத்திரத்தில் அவரின் முகத்தில் பளபள என்ற புன்னகை தெரிந்தது. நான் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தார். அவருடைய மகளும் எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். நான் பேசிய அரை குறை தெலுங்கை அவர் தெலுங்கில் மொழிபெயர்த்து தன் அம்மாவிற்குப் புரிய வைத்தார். அம்மா தெலுங்கில் சரளமாக பேசத் தொடங்கினார், “பயமா இருக்கு தம்பி....உயிர் போய் உயிர் வந்தது தான்....என்னால் என்ன முயற்சி செய்தாலும் அந்த நாட்களை மறக்க முடியவில்லை. சிறுநீர் வடிவதற்கு எனக்குள் ஒரு குழாய் பொருத்தி இருந்தார்கள். ஒரு நாள் இரவு வயிற்று வலி பொருக்கவில்லை. என் அருகில் இருந்த அத்தனை நோயாளிகளும் மயக்கத்தில் மூச்சு விடவே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த ஐ.சி.யூ வார்டில் டாக்டர், சிஸ்டர், வார்டு பாய், யாருமே இல்லை. நான் மட்டும் புலம்பிக்கொண்டு, வலியில் துடித்துக்கொண்டு இரவு முழுவதும் வேதனைப் பட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே வலியில் செத்து போய் விடுவேன் என்று நினைத்தேன். அப்போது காலையில் வந்த நர்ஸ் தான் அந்த குழாயை எடுத்துவிட்டார். அதில் அடைப்பு இருந்ததாம். அப்படியே ஒரு பக்கெட் அளவு சிறுநீர் வந்து படுக்கையிலேயே வடிந்தது. அதன் பின் தான் வலி தீர்ந்து நான் தூங்கினேன். அந்த நினைவை என்னால் மறக்கவே முடியாது” என்று விசும்பி விசும்பி அழுதுகொண்டே அந்த அம்மா சொல்லி முடித்தார். அந்த சம்பவம் முடிந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றும் அந்த அம்மா சில நாட்கள் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறார். அந்த நேரங்களில் எழுந்து உட்கார்ந்து கதறி கதறி அழுகிறார்.இதெல்லாம் தெரிந்துகொண்டதும் அந்த அம்மாவின் பிரச்சனை நன்றாகப் புரிந்தது. அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். அவரின் கண்களை பார்த்து அன்புடன், “பயப்படாதீங்க. எல்லாம் நல்லா ஆயிடும். உங்க சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு இதை முதலில் சரி செய்யலாம். வாரா வாரம் வந்து என் கிட்ட பேசுங்க. எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு ஏத்த சிகிச்சை செய்யலாம். எல்லாம் சரியாயிடும் பாருங்க” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
இன்று மருத்துவமனைக்கு என்னைப் பார்க்க அந்த அம்மா வந்திருந்தார். எனக்கு அவரை அடையாளமே தெரியவில்லை. சுத்தமாகக் குளித்து, அழகான மஞ்சள் நிற சுங்குடிச் சேலை கட்டிக்கொண்டு, நெற்றியில் இரண்டு ரூபாய் நாணைய அளவில் சிகப்பு குங்குமப் பொட்டுடன் வாய் நிறைய புன்னகையுடன் வந்திருந்தார். “நீங்க சொன்னதிலிருந்து உப்பே அதிகம் சேர்த்துகுறது இல்லை. காபி, டீ இதுலல்லாம் சர்க்கரை போடுறது இல்லை. நீங்க சொன்னது எல்லாம் செய்றேன். நல்லா இருக்கேன்.” என்று வெட்கம் கலந்த புன்னகையுடன் என்னுடன் பேசி மருந்து மாத்திரை வாங்கிச் சென்றார். அவர் வெளியே சென்றதும் அவரின் மகள் மறுபடியும் உள்ளே வந்து என்னுடன் பேசினார், “அம்மா இப்ப ரொம்ப பரவாயில்லை டாக்டர். நல்லா சாப்பிடுறாங்க, தூங்குறாங்க, அவங்க வேலையை அவங்களே செய்துக்குறாங்க. முன்னல்லாம் மருத்துவமனைக்கு வரவே மாட்டாங்க. நான் தான் கட்டாயப் படுத்தி அழைத்து வருவேன். இன்னிக்கு உங்களை பாக்க அவங்களே காலை சீக்கிரம் எழுந்து ரெடியாகி சந்தோஷமா வந்திருக்காங்க. உங்களை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டாக்டர். உங்களை தன் மகன் மாதிரி பாக்குறாங்க.” இதைக் கேட்டு மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாள் கொஞ்ச நேரம் அந்த அம்மாவிடம் அன்பாகப் பேசியதனால் அவர் குணமடைந்து விட்டாரா? இல்லை மருந்து மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பித்து அதன் விளைவாக அவர் நன்றாகி விட்டாரா? அல்லது என்னைத் தன் மகன் போல் பார்த்ததனால் அவருக்கு என்னைப் பிடித்தப் போய் அதனால் அவருக்கு மனச் சோர்வு குணமாகி விட்டதா? அல்லது மனச்சோர்வுக்கும் தூக்கத்திற்கும் அவருக்கு நான் கொடுத்த மாத்திரைகளின் விளைவா? எனக்கு இதற்கெல்லாம் பதில் தெரியவில்லை. எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த அம்மாவிற்கு என்னைப் பிடித்துப் போய் என்னைத் தன் மகன் போல பார்த்து, ஆவலுடன் என்னைப் பார்க்க வருவது அவரை குணப்படுத்தியதில் ஒரு சிறிய பங்காவது வகித்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. எல்லா நோயாளிகளுக்கும் தம் டாக்டர்களைப் பிடித்துப்போவதில்லை. அப்படி பிடிக்கவேண்டியது அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு வேளை ஒரு நோயாளிக்கு டாக்டரைப் பிடித்துவிட்டால்? அவரைப் போய் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிவிட்டால்? அவரை நண்பராக, உறவினராக பாவிக்க ஆரம்பித்துவிட்டால்? அதற்கென்று ஒரு சிறப்பான பலன் இருக்கும் என்றே தோன்றுகிறது. என் நண்பருடன் பேசிய அந்த தலைப்பு நினைவுக்கு வருகிறது. மருத்துவர்-நோயாளி உறவுகள் தொழில்முறை உறவுகள் என்று சொல்வதில் உண்மை இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் அது ஒரு உன்னதமான, உணர்வுபூர்வமான உறவாக இருப்பதையே நான் அனுபவித்திருக்கிறேன்.
Comments
Post a Comment