அன்பே ஆன்மீகம்!
கோயில்களுக்கு கூட்டம் அதிகம் இல்லாத நாட்களில், கூட்டம் அதிகம் வராத அதிகாலை நேரத்தில் போவதையே நான் விரும்புகிறேன். அப்படிப்பட்ட நேரங்களில் கடவுளுடன் தனிமையாக பேச்சுவார்த்தை நடத்தும் உணர்வு கிடைக்கிறது. கோயிலுக்கு நான் பெரும்பாலும் காலை எட்டு மணிக்கு முன்னரே சென்றுவிடுவது வழக்கம். அப்படிச் செல்லும்போது பல நேரங்களில் இறைவனும் நானும் மட்டுமே நின்று பேசும் உணர்வு எனக்குக் கிடைத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை அன்று திருமீயச்சூர் லலிதாம்பிகை உடனுறை மேகநாத ஸ்வாமி திருக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஞாயிறு விடுமுறை நாள். அதுமட்டுமல்லாமல் அன்று இராம நவமி நன்னாள். நாங்கள் கோயிலைச் சென்றடையும் நேரம் காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. கூட்டம் அதிகம் இருக்கப்போகிறது என்று நினைத்து பயந்து கொண்டே தான் சென்றோம். வழக்காமாக கூட்டம் இருக்கிறது என்பதை வண்டிகள் நிறுத்தும் இடத்தில் எத்தனை கார்கள், வேன்கள், பேருந்துகள் நிற்கின்றன என்பதை வைத்தே கணித்துக்கொள்ளலாம். அன்று அவ்வளவு கூட்டம் இல்லை போலும். எல்லா இடமும் காலியாகத் தான் இருந்தது. இதைக் கண்டவுடனேயே மனதில் சிறிய உற்சாகம் குடிகொண்டது. ஆர்வத்துடன் கோயிலுக்குள் நுழைந்தோம்.
கோயில் மிகவும் பெரியதல்ல. அழகான சிறிய கோயில் தான். ஆனால் புராதனமான கோயில். சிற்பங்களின் முகங்களில் இருந்த அழகும், கம்பீரமும், அவை வேறு ஒரு காலகட்டத்தில் வடிக்கப்பட்டவை என்று தெளிவாகக் காட்டின. நுழைந்ததும் நெய் விளக்கு ஏற்றலாம் என்று முடிவு செய்து, விளக்குகளை வாங்கிக்கொண்டு, அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். நுழைவாயில் கோபுரம், இறைவனின் கருவறை கோபுரம், மற்றும் வலது பக்கம் இறைவி லலிதாம்பிகையின் கருவறை கோபுரம் என்று மூன்று பக்கமும் கோபுரங்களால் சூழப்பட்ட மாடம் அது. காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. இப்படிப் பட்ட பலத்த சுழல் காற்றில் எப்படி நெய் விளக்குகளை ஏற்றுவது. கவனம் சிதறாமல், அகல் விளக்குகளை அடுக்கி, அவற்றில் நெய் ஊற்றி, வத்திக் குச்சியை ஏற்றினால் பலத்த காற்றில் அது அணைந்து விடுகிறது. மூன்று முறை முயற்சி செய்தாகிவிட்டது. ஏற்ற முடியவில்லை. அம்மா, அக்கா, நான் மூவரும் ஒன்றாக சேர்ந்து நின்றுகொண்டு காற்றை மறைத்துக்கொண்டு எப்படியோ விளக்குகளை ஏற்றிவிட்டோம். இப்படிப் பட்ட சுழல் காற்று வீசும் இடத்தில் விளக்கேற்றும் மாடத்தை வைத்தது இந்த கவனம் சிதறாத மன ஒருமைப்பாட்டிற்குத்தானோ என்று நினைத்து வியந்து கொண்டோம்.
வலதுகைப் பக்கம் திரும்பி லலிதாம்பிகை அம்மனின் கருவறையை நோக்கிச் சென்றோம். லலிதாம்பிகை அம்மன் தன் வலது காலை மடித்துக்கொண்டும் இடது காலைத் தொங்கவிட்டுக்கொண்டும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். தொங்கப்போட்டிருக்கும் இடது காலில் அழகான வெள்ளிக் கொலுசு அணிந்திருக்கிறாள். அன்னையைச் சுற்றி ஏற்றப்பட்டிருந்த அகல் விளக்குகள், அவளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சிவப்பு சேலை, அழகான மலர் மாலை அலங்காரங்கள், அவள் கழுத்தில் அணிவித்திருக்கும் ஆபரணங்கள் என்று கண் கவரும் காட்சியாக அன்னை கம்பீரமாக அமர்ந்திருந்தாள். கோயிலில் மொத்தமாக 5-6 பேர் தான் இருந்தார்கள். கூட்டமே இல்லை. அன்னையின் அருகாமையில் நின்று தரிசிக்கும் பேறு பெற்றோம். அர்ச்சகர் தீப ஆராதனை செய்து எங்களுக்கு குங்குமப் பிரசாதம் கொடுத்தார். அந்தக் குங்குமத்தில் ஒரு குளிர்ச்சி இருந்தது. அன்னையின் மேனியில் இருந்த குளிர்ச்சி தான் அந்த குங்குமத்தில் வந்திருந்ததோ என்று தோன்றியது. லலிதா ஸஹஸ்ரநாமம் இயக்கப்பட்ட இடம். அங்கு லலிதாம்பிகையின் முன்னே நின்றுகொண்டால் நமக்கே ஆனந்தத்திலும் வியப்பிலும் வார்த்தைகள் வந்து கொட்டுகின்றனவே, ஹயக்கிரீவருக்கு லலிதா ஸஹஸ்ரநாமம் தோன்றியதில் என்ன வியப்பு?
30 வருடங்களுக்கு முன் ஒரு பக்தையின் கனவில் லலிதாம்பிகை தோன்றி “எனக்குத் தங்கக் கொலுசு அணிவிப்பாயா?” என்று கேட்டிருக்கிறாள். அது வரை லலிதாம்பிகையின் சிலைக்குக் கொலுசு அணிவிக்க முடியும் என்று தெரியாது, பழக்கமும் இல்லை. இந்தப் பெண்மணி கோயிலில் விசாரிக்கவே சிலையை மறுபடியும் கூர்ந்து பார்த்தார்கள். பல நூற்றாண்டுகளாக அபிஷேகமும் அலங்காரமும் செய்து கொலுசு போடும் துவாரம் அடைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த துவாரத்தை சுத்தம் செய்ததும் லலிதாம்பிகையின் காலில் கொலுசு அணிவிக்க ஒரு துவாரம் உறுவானது. அதற்குப் பிறகு லலிதாம்பிகை அன்னைக்குக் கொலுசு அணிவிக்கும் பழக்கம் தொடங்கியது.
நாங்கள் சென்றிருந்த அன்று அன்னைக்கு பளபளப்பாக பட்டையான பெரிய வெள்ளிக் கொலுசு அணிவிக்கப்பட்டிருந்தது. அதன் பளபளப்பு கண்களைப் பரிக்கும் அளவிற்கு அழகாக இருந்தது. நாங்கள் நின்றிருந்த போது மற்றொரு குடும்பம் தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தது. ஒரு வயதான பெரியம்மா அர்ச்சகரிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து,
“சாமி, அம்பாளுக்குக் கொலுசு வாங்கி வந்திருக்கிறேன். போட்டுவிடவேண்டும்” என்று வேண்டி கேட்டுக்கொண்டார்.
தரிசனம் முடிந்து வெளியே வர தயராய் இருந்தோம். ஆனால் அந்த பெரியம்மா தந்த கொலுசு அணிவிப்பதை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அப்படியே நின்றுவிட்டோம். அர்ச்சகர் கொலுசை எடுத்துக்கொண்டு கருவறைக்குள் சென்றார்.
அவர் சென்றவுடன் அந்த பெரியம்மா என் அக்காவிடம், “ஏதோ என்னால முடிந்த சின்ன வெள்ளி கொலுசு வாங்கி வந்திருக்கேன். அவளுக்கு ஏற்கனவே பட்டையா பளபளன்னு பெருசா வெள்ளிக் கொலுசு போட்டிருக்காங்க. நான் வாங்கியாந்ததைப் போட்டா அது தெரியுமான்னு கூட தெரியல...என்னால இவ்வளவு தான் முடிஞ்சது....இதுவே 2500 ரூவாய்...” என்று புலம்பினாள். அவருக்குத் தன் வருமையை நினைத்து சிறிய தாழ்வு மனப்பான்மை. உலகத்திற்கே படியளக்கும் கோடீஸ்வரியான அம்பாளுக்குத் தன்னால் என்ன ஆபரணம் அணிவிக்க முடியும் என்று வருத்தப்பட்டுக்கொண்டார் அந்த பெரியம்மா.
“கவலைப் படாதீங்கம்மா. நீங்க வேணும்னா பாருங்க அம்பாள் கண்டிப்பா உங்க கொலுசை மனமாற ஏற்றுக்கொள்வாள்” என்று என் அக்கா தைரியம் சொன்னாள். அந்த பெரியம்மா கண்களில் ஆனந்தக் கண்ணீர். அவர் எதுவும் சொல்லாமல் அப்படியே நின்றிருந்தார்.
அர்ச்சகர் உள்ளே சென்று கொலுசுப் பொட்டலத்தைப் பிரித்தார். மெல்லிய வெள்ளிக் கொலுசை எடுத்து மெதுவாக அதை நேர் செய்து, அம்பாளின் பாதங்களில் அணிவித்தார். முதலில் அந்த பெரியம்மா சொன்னது போல் அந்தக் கொலுசு கண்களில் படவே இல்லை. பட்டையான பெரிய வெள்ளிக் கொலுசுதான் கண்களைப் பரிக்கும் பளபளப்புடன் தெரிந்தது. கொலுசை அணிவித்துவிட்டு தீப ஆராதனை காட்டும் நேரம் அந்த பெரியம்மா கொடுத்த மெல்லிய வெள்ளிக் கொலுசு லேசாக நழுவி பெரிய பட்டைக் கொலுசுக்குக் கீழே அழகான தொங்கட்டான் போல லாவகமாகத் தொங்கியது. பெரியம்மா அணிவித்த கொலுசு மிக அழகாகத் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இருந்த பெரிய வெள்ளிக் கொலுசின் அழகையும் அது கூட்டியது. அக்கா அந்த பெரியம்மாவிடம், “பார்த்தீங்களா, அம்பாள் உங்க வெள்ளிக் கொலுசை எப்படி ஏற்றுக்கொண்டாள் என்று?” என்று கூற, பெரியம்மா ஆனந்தத்தில் மூழ்கி கண்ணீர் விட்டு அன்னையின் எல்லை இல்லா கருணையை எண்ணி பூரித்துப் போனாள்.
கோயில் தரிசனம் முடிந்து அனைவரும் வெளியே வந்துவிட்டோம். அந்தப் பெரியம்மா என் அக்காவிடம் விடைபெற்றுக்கொண்டார், “போய் வரேன் மா. ரொம்ப நன்றிம்மா. உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்ப தெரிந்த ஒரு பெண் ஞாபகம் வருது. அவங்களை மாதிரியே நீ இருக்க. நீ நல்லா இருக்கணும்.” என்று வாழ்த்திவிட்டு வெளியேறினார். அந்த பெரியம்மா சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஒட்டிக்கொண்டது. “நீ எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒரு பெண் மாதிரியே இருக்கிறாய்.” இந்த வார்த்தைகளை நான் பல முறை, பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். உலகத்தில் மனிதர்களுக்கு அவ்வளவு முக ஒற்றுமை இருக்குமா? நம்மைப் போலவே அவ்வளவு முக ஜாடை உடையவர்கள் உலகில் இருப்பார்களா? இருக்கலாம், இல்லாமலும் போகலாம். எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. யாராவது நம்மிடம் அதிக அன்பும் அக்கரையும் காட்டினால் அவர்கள் நம் அம்மா, அக்கா, தங்கை, அப்பா, அண்ணன், தம்பி போன்ற நம் மேல் அதிக அன்பு காட்டும் மக்களை நமக்கு நினைவு படுத்தி விடுகிறார்கள். அன்பு காட்டும் நபர் நமக்குள் ஒரு விதமான இன்ப உணர்வை ஏற்படுத்துகிறார்கள். இதே உணர்வை நமக்குள் ஏற்படுத்திய உறவினரையோ அல்லது நண்பரையோ அது நமக்கு நினைவு படுத்துகிறது. அதனால் தானோ என்னவோ நமக்கு அவரிடம் நம் உறவினர் அல்லது நண்பரின் முக ஜாடை கூடத் தெரிய ஆரம்பிக்கிறது. அன்பு ஒரு உலகப் பொது மொழியாக உள்ளது. என் அக்காவிற்கும் அந்த பெரியம்மாவிற்கும் இடையே அன்பின் பரிமாற்றம் ஏற்பட்டிருந்தது, அந்த அன்புதான் அவர்களை இணைத்தது, அன்புடையவர்களின் நினைவை ஊட்டியது, ஆழமான ஒரு உறவுக்குப் பாலமாக அமைந்தது. அன்பே இறைவன்! அன்பே ஆன்மீகம்!
Comments
Post a Comment