பக்தியின் பல வகைகள்

இன்று காசி வருகையின் இரண்டாம் நாள். தீரஜ் அவர்கள் காலை 4.30க்கு தயாராகி விடுதியின் வெளியே வந்து நிற்கச்சொன்னார். “காலை சீக்கிரம் கிளம்பி கோயில்களை தரிசனம் செய்து வந்துவிட்டால் சரியாக இருக்கும். 7 மணி ஆகிவிட்டால் கூட்டம் தாள முடியாது” என்றார். 3.00 மணிக்கு எழுந்து மறுபடியும் தேனீரைத் தேடி வெளியே வந்தேன். இரவு முழுவதும் விழித்திருந்த காசி நகரம் காலை 3 மணிக்கு அமைதியே உறுவாக இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்ற பின் ஒரு முதியவர் சிறிய கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேனீர் கொதிக்க வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று தேனீர் கேட்டேன். “தமிழரா?” என்று கேட்டார். “ஆம்” என்றேன். “பில்டர் காபி இருக்கு. வேண்டுமா?” என்று ஹிந்தியில் கேட்டார். என் கையில் 50 ரூபாய் தான் வைத்திருந்தேன். தேனீர் 15 ரூபாய்பில்டர் காபி 25 ரூபாய். மூன்று தேனீர் போதும் என்றேன். பிளாஸ்டிக் கவர் ஒன்றை எடுத்து அதில் தேனீரை ஊற்றிக் கொடுத்தார். தேனீர் குடித்துகுளித்து தயாராகி கிளம்பிவிட்டோம். அதே குறுகலான சந்துகள்அதே ஆட்டோகுண்டும் குழியுமான சாலைகளில் ஆட்டோ தூக்கி தூக்கி போட்டதுநேற்று இந்த ஆட்டோ சவாரியின் வலி தெரியவில்லை. முதல் நாள் அல்லவாஇன்று உடலில் சில இடங்களில் எலும்புகள் உள்ளன என்ற உண்மையை அந்த ஆட்டோ சவாரி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே ஆட்டோ நிறுத்தப்பட்டது. அங்கிருந்து நடக்கவேண்டும் என்றார் தீரஜ். 

 

அகலமான அழகான சாலைஇரண்டு பக்கங்களிலும் கடைகள். கான்கிரீட்டால் போடப்பட்ட சாலை. நடக்கவே வசதியாக இருந்தது. காலை லேசான குளிரில் வேகமாக நடந்து கோயில் அருகே சென்றோம். முதலில் விசாலக்‌ஷி அம்மன் கோயிலுக்கு சென்றோம். தமிழர்களின் அடையாளம் காசியின் வரலாற்றில் பதிக்கப்பட்ட இடம் இந்த கோயில். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பம் கோயிலில் தண்டாயுதபாணிவினாயகர்சிவ லிங்கங்கள் நிறுவி 1900இல் குடமுழுக்கு செய்த வரலாறு அழகிய தமிழில் கோயிலின் சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. கோயிலில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு மறுபடியும் குறுகிய சந்துகளில் நுழைந்து காசி விஸ்வநாதர் ஆலையத்திற்கு வந்தோம். இன்னும் பொழுது விடியவில்லை. மணி காலை 5.15 இருக்கும். மந்தமான அந்த வெளிச்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் பிரம்மாண்டமாகவும் பளபளப்பாகவும் காணப்பட்டது. ஹிந்தியில் சிவனின் பாடல்கள் ஒரு பெண்ணின் இனிமையான குரலில் ஒலித்துக்கொண்டுருந்தது. அந்த காலை வேளையிலேயே நல்ல கூட்டம். மக்களின் பெரிய வரிசை நின்றுகொண்டிருந்தது. கடந்த 10 வருடங்களாக மக்கள் வரவு அதிகரித்து விட்டதாக நண்பர் கூறினார். “முன்பெல்லாம் தினமும் விஸ்வநாதர் தரிசனம் செய்வோம். இப்போது மாதம் ஒரு முறை செல்வதே கடினமாக உள்ளது. கூட்டம் எப்போதுமே அதிகமாக உள்ளது.” என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரிசையில் நின்றபின் ஒரு சில வினாடிகள் விஸ்வநாதர் சன்னிதியில் நின்று சிவலிங்க தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நான்கு வரிசைகளிலிருந்து கூட்டங்கள் முக்கிய சன்னிதிக்கு வந்து சேர்ந்துகொண்டிருந்தன. நாங்கள் நான்காம் வரிசையில் வந்து சேர்ந்து கொண்டோம். அதில் ஒரு வரிசை 300 ரூபாய் கொடுத்து வேகமாகதரிசனம் செய்யும் வரிசை. நாங்கள் ஒரு மணி நேரம் நின்று வந்துகொண்டிருந்தபோது அவர்கள் பத்தே நிமிடங்களில் வேகமாக வரிசையில் முன்னேரி செல்வதைப் பார்த்து சற்று கோபம் வந்தது. இதெல்லாம் பழகிய விஷயம் தானேகோயில்களில் பணம் தான் பெரிய இடம் வகிக்கிறது. காசி விஸ்வநாதர் கோயிலின் பிரம்மாண்டமும்பளபளப்பும் எந்த ஒரு ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்குக் குறைவாக இல்லை. மிக முக்கியமான விருந்தாளிகள்மந்திரிகள்தொழிலதிபர்கள் ஆகியோர் சௌகரியமாக அமர்ந்துகொண்டு கோயிலுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மெய்நிகர் உண்மை காட்சிகளாகக் (Virtual reality show) கண்டு களிக்க அறைகளும் இருந்தன. சென்னையில் சோழா ஐந்து நட்சத்திர விடுதிக்கு முதல் முறையாக ஒரு சந்திப்பிற்காக சென்றபோது ஏற்பட்ட அதே வியப்பும் பிரமிப்பும் இந்த கோயிலின் புதிய வளாகத்தைப் பார்க்கும்போது ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்எல்லொருக்கும் ஒரு பரபரப்புஅவசரம்எல்லோர் கையிலும் கைப்பேசிசுய-படங்கள் எடுத்துக்கொள்வது ஆகிய காட்சிகள் என்னை சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்தன. “இப்பல்லாம் பக்தியும் அதிகமாயிடுத்துஅவசரமும் அதிகமாயிடுத்து போல இருக்கு. அவசரமான பக்தி அதிகமா இருக்கு” என்று நானும் அம்மாவும் பேசிக்கொண்டோம்.

 

அங்கிருந்து அன்னபூரணி அம்மனின் கோயிலுக்குச் சென்றோம். ஒரு குறுகிய நுழைவாயில். அதில் ஒரு ஆள் கூட நேராக நடந்து நுழைய முடியாதுஅப்படிப்பட்ட நுழைவாயிலில் ஒரு கூட்டம் உள்ளே நுழைய முயற்சி செய்கிறதுஒரு கூட்டம் வெளியேற முண்டியடிக்கிறது. அந்த நெரிசலில் அம்மாஅப்பாவுடன் மாட்டிக்கொண்டு திணறிவிட்டேன். கூட்டத்தில் தள்ளுமுள்ளு செய்யும் மற்றவர்கள் அனைவரும் வாட்டசாட்டமாகவும் வேகமாகவும் வெறியுடனும் இருப்பதாகத் தெரிந்தது. மிகவும் திணறித் திண்டாடி ஒரு வழியாக அந்த கோயிலிலிருந்து தப்பித்து வெளியேறினோம். அங்கிருந்து வெளியேறியதும் இன்றைய காலைப் பொழுதின் மிகச் சிறப்பான விஷயம் நடந்தது. ஒரு ஆட்டோ கிடைத்து அதில் ஏறி அமர்ந்துகொண்டோம். கால் வலி கண்டிருந்தது. அந்த ஆட்டோ சாதாரண நாளில் அப்படிப்பட்ட முக்கியத்துவம் பெற்றிருக்காது. ஆனால் இன்றைய காலையின் சூழ்நிலையில் அது சொர்க்கம் போல இருந்தது. முதல் முறையாக என் மனதில் சிறிய சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பு முகம் வரை வரவில்லை. அதற்கு இதைவிடப் பெரிய நல்ல விஷயம் நடக்கவேண்டும். இந்த காலையின் பிரச்சனைகள் இத்துடன் முடிவடைந்தன என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த பிரச்சனை தன் தலையை விரித்துக்கொண்டு ஆட ஆரம்பித்தது. 

 

கால பைரவர் கோயிலுக்கு போகவேண்டும் என்று தீரஜ் எங்களை அழைத்துச் சென்றார். அதே போன்ற குறுகிய சந்துக்களினூடே நடக்கவேண்டும். அந்த சந்துகளில் சிறப்புப் பரிசுகள் இருந்தன. வழியெங்கும் மனித மலம் ஆங்காங்கே கிடந்தது. அதைத் தாண்டி தாண்டி செல்வதே பெரிய முயற்சியாக இருந்தது. கைத்தாங்கலாக சுவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றால் சுவர் முழுவதும் பீடா மென்று சிவப்பு நிறக் கோலங்கள் துப்பி வைத்திருந்தது. தீவிரமான முயற்சிக்குப் பின் கால பைரவர் கோயிலை அடைந்தோம். அங்கும் அதே கூட்டம்அதே அவசர-பக்தி. இன்னும் ஒரு புதிய வித பக்தியும் காணக் கிடைத்தது - ஆத்திர பக்தி. கோயிலின் முகப்பின் இரு நபர்களுக்கிடையே சண்டை மூண்டது. இருவதும் கைகளை தலைமேல் உயர்த்தி கால பைரவரை வணங்கிக்கொண்டிருக்கின்றனர். அப்படி வணங்கிக்கொண்டே ஒருவரை ஒருவர் ஹிந்தியில் தவறான வார்த்தைகளால் பேசி திட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆத்திரமும் வந்துவிட்டதுகோபமும் கொதித்துவிட்டதுபக்தியும் அதே நேரத்தில் வந்துவிட்டது. இதைப் பார்த்த போது சில நேரம் எனக்கு தும்மலும் விக்கலும் ஒரே நேரத்தில் வந்தால் இரண்டும் இல்லாத ஒரு வினோதமான சத்தமும் உணர்வும் ஏற்படும்அதன் நினைவு வந்துவிட்டது. ஒரு வழியாக இந்த கோயில் தரிசனங்களை முடித்துக்கொண்டு விடுதி அறைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.

 

மனதில் பல கேள்விகளும் குழப்பங்களும் நிரம்பி இருக்கின்றன. நான் இறை நம்பிக்கை உடையவன். எனக்கு மேலே உள்ள ஆன்மீக சக்தியை நான் மதிக்கிறேன். என் வாழ்கையை அந்த சக்தி தான் வழி நடத்துகிறது என்று நம்புகிறேன். கோயிலுக்குச் செல்லுவது எனக்கு ஒரு மன நிறைவான அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இந்த இறை உணர்வைத் தான் நான் பக்தி என்று நம்புகிறேன். நமக்கு மேல் உள்ள ஒரு சக்தியிடம் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்வது தான் பக்தி. இப்போதும் பக்திக்கு இது தான் அர்த்தமாஅல்லது இன்று பக்தி வேறொரு பரிணாமத்தில் இருக்கிறதாஇன்று பக்தி அவசரத்துடனும்கோபத்துடனும்ஆடம்பரத்துடனும் சேர்ந்து வருகிறதேஇது இயல்பு தானாஎனக்கு இது புரியவில்லை. எனக்கு நானே சொல்லிகொள்ளும் சமாதானம் என்னவென்றால் “எனக்கு இறைவனுடன் இருக்கும் தொடர்பு எனக்கு மட்டுமே சம்மந்தப்பட்டது. சுற்றி இருக்கும் மக்களின் எண்ணங்களும் அவர்களின் உணர்வுகளும் எனக்கு சம்மந்தப்பட்டதில்லை.” இனி இதுபோன்ற கூட்டம் சேரும் இடங்களுக்கு போவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். என் ஆன்மீகம் இனி என் நம்பிக்கைக்கு ஏற்றார்போல் நான் கடைபிடிப்பேன்.

Comments

Popular posts from this blog

Rebuilding trust in communities

Skills passed down through ages

Misappropriation versus Representation