அக ஒளி பரவல்
நேற்று ரூசக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. காலையில் 9 மணிக்கு ரூசக் நிறுவன அலுவலகத்தை அடைந்தபோது அந்த இடமே அமைதியாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் தான் அங்கு நிலவியிருந்த பரபரப்பு புலப்பட்டது. பணியாளர்கள் சிறு சிறு கூட்டங்களாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. வருடம் ஒரு முறை எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் நாள். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே நிறத்தில் சேலை எடுத்துத் தரப்பட்டிருந்தது. பளபளக்கும் புதிய சேலையும், அவரவர் விருப்பதிற்கேற்ற நகை, ஆபரணங்களும், பூவும் சூடிக்கொண்டு, மகிழ்ச்சியாக உரத்த குரலில் பேசிக்கோண்டும், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொண்டும் கலகலப்பாக இருந்தது.
நேரம் 10.30 இருக்கும், நிகழ்ச்சி தொடங்கியது. குத்துவிளக்கேற்றி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்க 11 ஆகிவிட்டது. முதலில் கிராமத்துப் பெண்கள் மேடை ஏறி சிறு நாடகங்கள் நடித்துக் காட்டினர். அதில் ஒரு கிராமத்தின் நாடகம் மிகச் சிறப்பாக இருந்தது. கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி பெண் குழந்தையின் கதை. முதலில் அவள் வீட்டிலேயே அவளை படிக்க அனுப்ப மறுக்கிறார்கள். நடக்க முடியாத குழந்தை எப்படி பள்ளிக்கூடம் போய் மற்ற குழந்தைகளுக்கு ஈடாக படித்து முன்னேறுவாள் என்று பெற்றோருக்கு பயம். அதைத் தாண்டி பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு பள்ளிக்கூடத்தில் வசதிகள் இல்லை. அதனால் பல இடஞ்சல்கள், தடைகள், அவற்றைத் தாண்டுகிறாள். சற்று வயது வந்தவுடன், பள்ளிக்குச் செல்லும் வழியில் பாலியல் கேலி, கிண்டல், சீண்டல்களுக்கு ஆளாகிறாள், அதையும் தாண்டி படிக்கிறாள். படித்து முன்னேறி அவள் ஒரு மருத்துவர் ஆகிறார். நாடகத்தில் கடைசி காட்சியில் அவளை படிக்க வேண்டாம் என்று முடக்கி போட நினைத்த பக்கத்து வீட்டு பாட்டிக்கே உடல் நலம் சரியில்லாமல் போக இந்தப் பெண் அவருக்கு சிகிச்சை செய்கிறாள். இந்த நாடகத்தின் கதைக் களமே சிறப்பாக இருந்தது. சமுதாயத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் மாற்றுத் திறன் கொண்ட ஒரு பெண் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதையும் சிறப்பாக காட்டியிருந்தார்கள். நாடகத்தின் காட்சி அமைப்பு, நடித்தவர்களின் முக பாவனைகள், அவர்களின் உடல் மொழி, அவர்கள் வசனம் பேசிய தெளிவு மற்றும் குரல் வளம் எல்லாமே மனதை நெருடி, ஆழமான சிந்தனையைத் தூண்டும் விதமாக இருந்தது. இந்த நாடகம் நடத்திய குழுவுக்குத் தான் பரிசளிக்க முடிவெடுத்தோம். பரிசளிக்கும் விழாவின் போது நாடகத்தில் கலந்து கொண்டவர்கள் மேடை ஏறினார்கள்.
“ரொம்ப சிறப்பான நாடகம். கதை, வசனம் எல்லாம் யாரு எழுதினாங்க?” என்று விசாரித்தேன்.
எல்லோரும் சேர்ந்து ஒரு சிறுமியை முன்னே தள்ளிவிட்டார்கள். பதினான்கு – பதினைந்து வயது இருக்கும். அதிசயமாக இருந்தது.
“ரொம்ப நல்லா நாடகம் எழுதியிருக்க. உன் பேரு என்ன?”
“சலீமா சார்”
“எப்படி இந்த தலைப்புல நாடகம் போடணும்னு தோணுச்சு?”
“எங்க ஸ்கூலில் மாற்றுத் திறனாளி டீச்சர் ஒருத்தங்க இருக்காங்க. அவங்கள பாத்தா எனக்கு வியப்பா இருக்கும். இப்படி எல்லாம் தான் அவங்க கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கணும்னு அடிக்கடி நினைச்சு பார்ப்பேன். அதை தான் கதையா சொல்லி நாடகமா போட்டுட்டோம்”
இதைக்கேட்ட எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த சிறுமியை பாராட்டி அவர்களுக்கு பரிசளித்தோம். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் வழியில் காரில் அமர்ந்திருந்தேன். காதில் ஒலிபெருக்கி பொரியில் மெல்லிய புல்லாங்குழல் இசை ஒலித்துக்கொண்டிருந்தது. சனிக்கிழமை மாலை என்பதால் வாகன நெரிசல். வெளியே வாகனங்களின் நெருக்கடி, காதில் மெல்லிய புல்லாங்குழல் ஒலி, மனதில் அந்த சிறுமி பற்றியும் அவளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பற்றியும் உற்சாகமான நினைவுகள். இவற்றோடு பயணித்து வீடு வந்து சேர்ந்தேன்.
நம் அன்றாட வாழ்கையில் நாம் வெவ்வேறு நபர்களை சந்திக்கிறோம், காட்சிகளை காண்கிறோம், சம்பவங்களை உள்வாங்கிக்கொள்கிறோம். பல நேரம் இவற்றை நாம் ஆழமாக கவனிப்பதில்லை, அவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை, அவற்றை அப்படியே கடந்து போய்விடுகிறோம். அதே நபர்களை, சம்பவங்களை, காட்சிகளை பார்க்கும் வேறு சிலரை அவை ஆழமாக பாதிக்கின்றன. அவர்களுக்குள் அந்த நபர்கள், காட்சிகள், சம்பவங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த அரசு நடு நிலைப்பள்ளி மாற்றுத் திறனாளி பெண் ஆசிரியை அவர்களை நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பர்க்கிறார்கள், அவருடன் பாடம் படிக்கிறார்கள், ஆனால் அவர் ஒரு சிலரின் மீது ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறார். அந்த ஆழமான தாக்கம் ஒரு கலை வடிவமாக வெளியாகிறது.
நேற்று முந்தைய நாள் என்னுடன் 5-6 வருடங்களுக்கு முன் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவரை சந்தித்தேன். அவர் மருத்துவ பட்டம் பெற்று மேல் படிப்பிற்காக வெளி மாநிலம் சென்று விட்டார். அதன் பின் அவருடன் எனக்கு தொடர்பில்லை. கல்லூரியில் இருந்த போது மிகவும் நெருக்கமான ஆசிரியர்-மாணவர் உறவு இருந்தது. பல நாட்கள் அமர்ந்து அழ்ந்த தத்துவங்கள் விவாதித்திருக்கிறோம். ஆனால் அவர் மேல் படிப்பிற்காக சென்றுவிட்ட பிறகு அவருடன் சற்றும் தொடர்பில்லாமல் இருந்தது. அவர் சற்று பொருளாதார சிக்கல்கள் கொண்ட பின்னணியிலிருந்து வந்த மாணவர். அப்படி கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கே உறிய தன்னம்பிக்கையும், சுயமரியாதையும், கண்ணியமும், கடினமான உழைப்பும் அவரிடம் எப்போதும் நிரம்பி இருந்தது. அவரை அடிக்கடி நினைவு கொள்வேன். அவருக்குப் பிறகு என்னுடன் பயின்ற பல மாணவர்களுக்கு அவரைப் பற்றி கூறியும் இருக்கிறேன்.
“சார், உங்களுக்கு நான் ஒன்று கொடுக்கவேண்டும்” என்று என்னிடம் ஒரு புத்தகத்தை நீட்டி, அதனுடன் ஒரு இனிப்பு பாக்கெட்டும் கொடுத்தார். அது அவருடைய மேற்படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரை.
“சார், இது உங்கள் காப்பி. நேரம் கிடைக்கும்போது படியுங்கள்” என்றார்.
நான் அதை வாங்கி பைக்குள் வைத்துவிட்டேன். அதன் பின் அவரின் அறுவை சிகிச்சை மேல் படிப்பு பற்றிய பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
“இந்த கல்லூரியில் என்னுடைய பெராசிரியர்களிடம் நான் நம் வழிகாட்டிகள், நம் நலம் விரும்பிகள் இவர்களை எப்படி நடத்தவேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.” என்றார். நாங்கள் சந்தித்த அந்த இரண்டு மணி நெரங்களில் அவர் தன் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் பெருமைகளை கூறிக்கொண்டே இருந்தார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
சந்திப்பு முடிந்து கிளம்பும் நேரத்தில் அவர், “சார், உங்களைப் பற்றி நான் என் ஆய்வுக் கட்டுரையில் நன்றி கூறும் பகுதியில் எழுதி இருக்கிறேன். அதைப் படிக்கிறீங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.
அவசரமாக புத்தகத்தை வெளியே எடுத்து புரட்டினேன்.
“என்னால் மறக்கமுடியாத ஒரு வழிகாட்டி பேராசிரியர். விஜய் அவர்கள். தாங்கள் என்னுடைய குரு, வழிகாட்டி. உங்கள் ஆதரவு என்னுடைய மருத்துவப் பயணத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. உங்களை 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் சுதந்திரத்தை எனக்கு நீங்கள் அளித்தீர்கள். நீங்கள் மருத்துவத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும், ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சேவைகளைக் கொண்டு சேர்ப்பதிலும் காட்டிய ஆர்வம் மற்றும் உற்சாகம் என்னை உண்மையாக ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறது. இவை எனக்கு திசை காட்டி என் மேல் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன.” என்று எழுதி இருந்தார்.
முதலில் அவர் எழுதியதைப் படிக்கும்போது இதெல்லாம் நம்மைப் பற்றித் தான் எழுதியிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. நன்றி சொல்லி, கட்டி அணைத்து அன்பு பகிர்ந்துகொண்டு அவர்வர் பாதையில் சென்று விட்டோம். இரவு சாப்பிட்டுத் தூங்கியும் ஆகிவிட்டது.
காலை எழுந்ததும் முதல் எண்ணம் அந்த மாணவர் பற்றியதாக இருந்தது. இரவு முழுவதும் ஆழ் மனது அவரைப் பற்றியே நினைத்திருக்கவேண்டும். அதன் நீட்சியாக காலை சமையல் செய்யும்போதும் முந்தைய நாள் நடந்தவற்றை நினைத்துக்கொண்டே இருந்தேன். என் அம்மாவிடமும் அவரைப் பற்றிப் பேசினேன். அம்மாவும், நானும் புரியாத மன மகிழ்ச்சியில் சற்று நேரம் திளைத்திருந்தோம். நான் கல்லூரியின் ஆசிரியராக இருந்தபோது, கற்பித்தலை சிறப்பாக செய்யவேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்திருந்தேன். எப்போதும் புதிய கற்பித்தல் முறைகளைக் கையாள யுக்திகளைத் தேடிக்கொண்டிருப்பேன். வகுப்பறையை ஒரு புனிதமான இடமாக பாவித்தேன். அதே போல மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்றால் அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அப்படியே வாழ்ந்திருக்கிறேன். பல மாணவர்கள் இரவு 1 மணி, 2 மணிக்கெல்லாம் பேசியிருக்கிறார்கள். எல்லாமே அவசியமான பேச்சுக்கள். ஒரு முறை கல்லூரியில் ஒரு மாணவருக்கு அசம்பாவிதம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. அந்த சமையம் அவரின் நண்பர்கள் அனைவருக்கும் எப்போதும் நேரிலும், தொலைபேசியிலும் உடன் இருந்திருக்கிறேன். நான் கொடுத்த அந்த சுதந்திரத்தை யாரும் தவறாக பயன் படுத்தியதே கிடையாது. மாறாக எங்கள் உறவு வலுவடைந்திருக்கிறது.
மாணவர்களுக்குப் பேச்சால் மட்டுமில்லாமல் செயலாலும் நல்ல மருத்துவத்தை எடுத்துக் காட்டவேண்டும் என்று நினைத்து அவர்களை என்னுடன் நான் பணி செய்யும் கிராமப் புர மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறேன். அவசரமான, தொழில் நுட்பங்கள் நிறைந்த இன்றைய மருத்துவ உலகில் அன்பு, பரிவு, ஆதரவு ஆகியவற்றை செயல்முறைப் படுத்தி மாணவர்களுக்குக் காட்டி அவர்களுக்கு இவற்றில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இவை எல்லாம் என் மனதில் இருந்த எண்ணங்கள். இவற்றை நான் யாரிடமும் கூறியதும் இல்லை, எழுதியதும் இல்லை. ஆனால் அந்த மாணவர் என் எண்ணங்களில் இருந்த விஷயங்களை என் செயல்களில் கண்டு, அதைப் புரிந்துகொண்டு, அதைப் பற்றித் தன் ஆய்வுக் கட்டுரையின் நன்றியுறைக்கும் பக்கத்தில் எழுதியிருந்தார். நாம் முயற்ச்சி செய்து நடை முறை படுத்த நினைத்தது வீண்போகவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. என் உள்ளக்கிடக்கை ஒரு மாணவர் புரிந்துகொண்டிருந்த அந்த மகிழ்ச்சி என்னை திக்குமுக்காட வைத்தது.
அந்த கிராமத்து சிறுமியின் ஆசிரியைக்கு இந்த நாடகம் பற்றித் தெரியவந்தால் அவரும் இப்படித் தான் மகிழ்வார் போலும். பல நேரங்களில் நாம் மற்றவர்களின் வாழ்கையில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை. நல்ல எண்ணங்களும், நல்ல செயல்களும் எப்போதும் இல்லாவிட்டாலும், எப்போதாவது ஒரு முறை கண்டிப்பாக கவனிக்கப்படும். எல்லரையும் இல்லாவிட்டாலும் தயாரான மனநிலையில் உள்ளவர்களை அது கண்டிப்பாக ஊக்குவிக்கும். ஒவ்வொரு நல்ல எண்ணமும் ஒவ்வொரு நல்ல செயலும் ஒரு அகல் விளக்கு போன்றது. அது இருக்கும் இடத்தில் அஞ்ஞானம், சோகம் என்ற இருளை நீக்குகிறது. அதுமட்டுமில்லாமல் மேலும் பல அகல் விளக்குகளை ஏற்றி மற்ற இடங்களுக்கும் வெளிச்சத்தைப் பரப்புகிறது. என் குருமாரின் அக ஒளி என்னை வழி நடத்தி என்னுள் ஒளி ஏற்றியது, என் மூலம் அந்த மாணவருக்கும் பரவியிருக்கிறது. அந்த ஆசிரியை தன் அக ஒளியை அந்த சிறுமிக்குப் பரப்பியிருந்தார். இந்த ஆரிசியர்-மாணவர் பாரம்பரியம் இருக்கும் வரை இந்த அக ஒளி பரவல் இருந்துகொண்டே இருக்கும்.
Comments
Post a Comment