நன்கொடையில் ஏற்றத்தாழ்வு
சமீபத்தில் நாங்கள் பீஹார் மாநிலத்தில் உள்ள கயா நகரத்திற்குச் சென்றிருந்தோம். கயா, பீஹாரின் மிகத் தொன்மைவாய்ந்த நகரமாகும். இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு தலம். இங்கு மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் (உணவு) படைத்தால் அவர்களுடைய பசி ஆறும், மற்றும் அவர்கள் மனம் குளிர்வார்கள் என்று நம்பிக்கை. இந்து மதத்தில் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து தத்தம் முன்னோர்களுக்குப் படையல் செய்து அவர்களை வணங்குகின்றனர். என்னுடைய அப்பா, அம்மா அவர்களின் பெற்றோருக்கும், முன்னோர்களுக்கும் படையல் செய்து வணங்கவேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் அவர்களுடன் நானும் கயா சென்றிருந்தேன். இரயில் மூலம் கயா சென்றடைந்து நாங்கள் முதலில் சந்தித்தது கயா இரயில் நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளை சுமந்து உதவும் ஒரு தொழிலாளியைத் தான். எங்களிடம் 6 பெட்டிகள் இருந்தன, கயா இரயில் நிலையத்தில் படிகள் ஏறி இறங்கி தான் வெளியே வரவேண்டும். அப்பா அம்மாவால் படி ஏறி இறங்குவதே கடினமாக இருந்ததால், அந்த இளைஞரின் உதவியை நாடினோம். வயது 20-22 இருக்கும். உயரம் ஐந்தடிக்கு அறுகாமையில். மாநிறம், கண்களில் ஒரு இளைஞனுக்குறிய துருதுருப்பு. அவர் பெயர் விஷால். எங்கள் பெட்டிகளில் 4ஐ அவர் தூக்கிக்கொண்டார், இரண்டை நான் தூக்கிக்கொண்டேன், கயா இரயில் நிலையத்திலிருந்து வெளியேறினோம். விஷாலின் முகத்தில் மாறாத சிறிப்பு, கலகலப்பாக ஏதோ பேசிக்கொண்டே வந்தார். சுற்றி இருந்த இரைச்சலில் அவர் சொன்னதில் பாதி காதில் விழவே இல்லை. அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. சந்தோஷமாக ஏதோ பேசிக்கொண்டே வந்தார். எங்களை அழைத்துச் செல்ல வந்த வண்டி எங்கே என்றே தெரியவில்லை. நாங்கள் தேடிக்கொண்டிருக்கையில் விஷால் எங்கள் கூடவே நின்று, வண்டியை கண்டுபிடித்து எங்களையும் எங்கள் பெட்டியையும் அதனுள் ஏற்றி அனுப்பும்வரை எங்கள் கூடவே இருந்து உதவினார். நாங்கள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பேசிய ஊதியத்தைவிட ஒரு 100 ரூபாய் அதிகமாக அவரிடம் கொடுத்த போது, “ஐயா, தவறாக அதிக பணம் கொடுத்துவிட்டீர்கள்” என்று 100 ஐத் திரும்ப கொடுத்தார். அவரைப் பார்த்து சிரித்து அந்த பணத்தை அவர் கையில் அழுத்தியபோது விஷால் மிக அழகான புன்னகை புரிந்திவிட்டு வணக்கம் சொல்லிவிட்டு ஒரே துள்ளலாய் ஓடிவிட்டார். விஷாலின் தொழில்முறைப் பண்பு, அவருடைய புன்னகை மலர்ந்த முகம், அவருடைய கண்ணியம், நேர்மை இதெல்லாம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
இரவு விடுதியில் தங்கிவிட்டு, காலை எழுத்து முன்னோர்களுக்கான படையல் செய்து வணங்க ஒரு மடத்திற்குச் சென்றோம். அந்தணர்கள் ஹோமங்களும், யாகங்களும், பூஜைகளும் செய்யும் மடம் அது. நாங்கள் அங்கே செல்லும்போதே 10-15 பேர் அங்கு மந்திரங்கள் சொல்லி படையல் செய்யும் சடங்குகளைச் செய்துகொண்டிருந்தனர். இரண்டாம் மாடியில் ஒரு திறந்த இடம், அங்கு தான் அப்பா, அம்மா மற்றும் எங்களுடன் இருந்த மொத்தம் 11 பேருக்கு படையல் போடும் சடங்கு செய்துவைக்கப்படுவதாகத் திட்டம். பெரிய கூடம், அதன் ஒரு பக்கம் குழாய் மற்றும் கை, கால் பாத்திரங்கள் கழுவும் இடம், மற்ற பக்கம் சுவர். நடுவில் உட்கார்ந்து பூஜைகளும் ஹோமங்களும் செய்யும் இடம். குழாயில் தண்ணீர் வழிந்து, அந்த இடமே ஈரமாகவும் சொதசொதப்பாகவும் இருந்தது. ஆந்தணர் ஒருவர் வந்தார். வந்து மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார். வடித்த அரிசியைக் கொடுத்து அதில் 64 உருண்டைகள் பிடித்து பிண்டங்களாக (உணவு) வைத்தார்கள். நான்கு தலைமுறை முன்னோர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களை மனதால் வணங்கி, அவர்களை அழைத்து அவர்களுக்கு அந்த சாத உருண்டைகளைப் படையாலாகப் படைத்தனர். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு போய் விஷ்ணு பாதம் இருக்கும் கோயிலிலும், பால்குனி நதியிலும், அட்சைய வடம் என்ற மரத்தின் அடியிலும் சேர்த்தனர். இந்த சடங்குகள் எல்லாம் நடந்து முடிய காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகிவிட்டது. அதன் பின்னர் தான் எல்லோரும் சாப்பிட்டோம்.
இந்த சடங்குகளின் போது அட்சைய வடம் என்ற மரத்தின் அடியில் படையலை சேர்க்கச் சென்ற இடத்தில் மனதை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று நடந்தது. அட்சைய வடம் என்ற மரத்தைப் பற்றி இராமாயணத்தில் கதை ஒன்று உண்டு. ராமன், இலக்குவன், சீதை காட்டிற்குக் கிளம்பி வந்துவிட்டனர். தசரதர் இறந்துவிட்டார். அப்போது ராமனுக்கு இந்த தகவல் தெரிய வர, தன் தந்தைக்கு படையல் செய்யும் நோக்கத்தோடு கயாவிற்கு வருகிறார். அப்போது நகரத்தின் உள்ளே சென்று படையல் இடுவதற்கான அரிசி, பருப்பு, காய் எல்லாம் வாங்கச் செல்கிறார். சீதை தனியாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து தசரதரின் ஆத்மா சீதையிடம் வந்து உடனே படையல் இடுமாறு கேட்கிறது. சீதை, பால்குனி நதி, கயாவில் இருக்கும் அந்தணர் ஒருவர், ஒரு பசு மாடு மற்றும் அட்சய வடம் என்ற மரம் ஆகியவற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு படையல் படைத்து விடுகிறாள். ராமன் வீடு திரும்பி படையல் இட முயற்சிக்கும்போது தசரதர் நான் ஏற்கனவே படையல் பெற்றுக்கொண்டேன் என்று கூறிவிடுகிறார். இதைக் கேட்ட ராமனுக்கு கோபம் வந்து சீதையை விசாரிக்க, சீதை தன் சாட்சிகளை அழைக்கிறாள். அதில் ராமனின் கோபத்திற்கு பயந்து பால்குனி நதியும், பசு மாடும், அந்தணரும், பொய் சொல்லிவிடுகிறார்கள். அட்சய வடம் மட்டுமே உண்மை சாட்சி சொல்கிறது. அதனால் சீதை மனம் குளிர்ந்து அட்சய வடத்திற்கு வரம் தருகிறாள். தன் முன்னோர்களை நினைத்து யாரெல்லாம் அட்சய வடத்தின் அடியில் படையல் இடுகிறார்களோ அவர்கள் முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கும் என்று வரம் தருகிறாள். இது தான் அட்சய வடத்தின் கதை. அதனால் இன்றும் தன் முன்னோர்களுக்கு படையல் படைக்க விரும்புபவர்கள் அட்சைய வடத்தின் அடியில் படையலை செலுத்துகிறார்கள். நாங்கள் அரிசி உருண்டைகளைப் பிடித்து, மந்திரங்கள் எல்லாம் சொல்லி அட்சைய வடத்தின் அடியில் செலுத்த வந்திருந்தோம்.
நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்தது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றுகொண்டிருந்தது. நாங்கள் ஹோமங்கள் செய்த மடத்திலிருந்து அட்சைய வடம் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இருக்கும். படைக்கப்பட்ட அரிசி உருண்டைகளை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் அட்சைய வடத்திற்கு வந்து சேர்ந்தோம். கயாவில் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. முதலில் பால்குனி நதியில் படையல் இட்ட இடத்திலும் கூட்டம். பின்னர் விஷ்ணு பாதம் கோயிலிலும் கூட்ட நெரிசல், இங்கு அட்சைய வடத்திலும் கூட்டம். ஒரு சிறிய மடு ஒன்று உள்ளது. அதன் மேலே தான் மரம் இருக்கிறது. படி ஏறி மாடிக்கு செல்லவேண்டும். போகும்போது மக்கள் கூட்டத்தை தாண்டிக்கொண்டு மெதுவாக படி ஏறிச் சென்றோம். மழை பெய்து ஈரமாக படிகள் இருந்ததனால் விழாமல் இருக்க மெதுவாகச் சென்றோம். அங்கு சென்றதும் நிறைய அந்தணர்கள் அங்கு தயாராக நின்றிருந்தனர். அவர்களிடம் அரிசிப் பிண்டங்களைக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு 500 ரூபாய் பணம் தரவேண்டும். அதை வாங்கிக்கொண்டு அவர்கள் ஏதோ மந்திரங்களை கூறுவார்கள், அதன் பின் மரத்தடியிலே அந்த அரிசி உருண்டைகளைச் சேர்த்துவிட்டு சென்றுவிடவேண்டும். இதற்கு நல்ல கூட்டம். அப்பா, அம்மா அந்த சடங்கை செய்து முடித்தனர். அவர்களை பத்திரமாக பார்த்து அழைத்துக்கொண்டு படிகள் இறங்க வெளியேறும் இடத்திற்கு வந்தோம்.
அந்த இடத்திற்கு வந்தது தான் தெரியும், எங்கிருந்தோ பத்து பதினைந்து சிறுமிகள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். “அம்மா, அம்மா...காசு கொடுங்கள்” என்று ஹிந்தியில் கேட்க ஆரம்பித்தார்கள். திடீரென்று “அம்மா...அப்பா” என்ற சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. சில சிறுமிகள் அழ ஆரம்பித்தார்கள். சில சிறுமிகள் என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் என் அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டு “அம்மா...அம்மா” என்று கேட்க ஆரம்பித்தார்கள். “இது தான் முதல் முறை. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். மறுபடி மறுபடி வந்து உங்களிடம் கேட்க மாட்டேன். எனக்கு ஒரே ஒரு முறை காசு போட்டுவிடுங்கள்” என்று ஒரு சிறுமி ஹிந்தியில் என்னிடம் மன்றாட ஆரம்பித்தாள். என் பையில் 10 ரூபாய் நாணையங்கள் மொத்தம் 300 ருபாய்க்கு இருந்தது. அது ஒரு சிறிய கவரில் இருந்தது. அந்த கவரைப் பிரித்து, அதில் இருந்த பத்து ரூபாய் நாணையங்களை ஒரு கையில் அள்ளி அந்த சிறுமிகள் நீட்டிய பாத்திரத்தில் ஒன்றொன்றாகப் போட ஆரம்பித்தேன். நான் போட ஆரம்பித்த உடனே எங்கிருந்தோ அது வரை கெஞ்சி, அழுத்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு ஒரு வேகம் வந்தது. போட்டி போட்டுக்கொண்டு தன் தட்டுகளை என் கைகளின் அடியில் வரும்படி ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, பெரிய சத்தம் எழுப்பிக்கொண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அந்த இடமே பெரிய அமளிக் களமாகிவிட்டது. அம்மா, அப்பா மற்றும் என்னை ஒரு 20-25 சிறுமிகள் சூழ்ந்து நின்றுகொண்டிருந்ததால் எங்களால் நகர முடியவில்லை. நானும் இருந்த அத்தனை 10 ரூபாய் நணையங்களையும் எடுத்துப் போட்டு காலியாக்கிவிட்டேன். மீதி நாணையங்கள் இல்லை. எங்கள் மூவரையும் அந்த கூட்டம் தள்ளிக்கொண்டு எப்படியாவது 10 ரூபாயை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று முண்டியடிக்கிறது. அம்மா, அப்பா அந்த தள்ளு முள்ளில் எங்காவது விழுந்துவிடப் போகிறார்களே என்று எனக்கு பயம் வந்துவிட்டது. அப்போது எங்கள் கூட வந்த நபர் ஹிந்தியில் பெரிதாக சத்தம் போட்டு அந்தச் சிறுமிகளைக் கலைந்து போக வைத்தார். நாங்கள் மூவரும் மெதுவாக நடந்து படி இறங்க ஆரம்பித்தோம். 14-15 வயது இருக்கும் 3 சிறுமிகள் எங்கள் கூடவே படியில் இறங்கி வந்தனர் “அம்மா...அப்பா....காசு கொடுங்கள்” என்று விடாமல் கேட்டுக்கொண்டே வந்தனர். பையில் 100-200-500 நோட்டுக்கள் தான் இருக்கிறது. அவ்வளவு பெரிய தொகையை தட்டில் போட மனம் வரவில்லையே!“சில்லரை இல்லை” என்று நான் கூறிக்கொண்டே இறங்க…அவர்களில் ஒரு சிறுமி, “நோட்டு கொடுங்கள், நான் பொருப்பெடுத்து அந்த நோட்டை சில்லரையாக்கி எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிடுகிறேன்..என்னை நம்புங்கள்..” ஏன்றாள். அதற்குள் எங்களை பின் தொடர்ந்து வரும் கூட்டம் வளர்ந்துகொண்டே வந்தது. நாங்கள் தடுமாறிக்கொண்டெ வந்து ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். ஆட்டோ வேகம் பிடித்து பிரதான சாலையில் நுழையும் வரை 5-6 சிறுமிகள் கூடவே ஓடிவந்து காசு கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இப்போதும் இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரம் சென்றுவிட்டது. ஆனால் சற்று நேரத்திற்கு முன் நடந்தது போன்ற உணர்வு இன்னும் எனக்குள் இருக்கிறது. அந்தச் சிறுமிகளின் கண்களில் இருந்த தாகம், பசி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்களின் குரலில் இருந்த துயரம், கெஞ்சல், அழுகை இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தானத்தையும், ஈகையையும் ஒரு தொழாலகவே நடத்திக்கொண்டிருக்கும் மந்திரம் ஓதும் “உயர்ந்த” சமூகத்தினர், அவர்களுக்கு மரியாதையுடன் 1000 ரூபாய் பணம் கொடுத்து, அவர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களுக்கு விருந்து படைத்து, உடுத்திக்கொள்ள வேட்டியும் வாங்கித் தந்து அவர்கள் மூலமாக மட்டுமே முன்னோர்களுக்கு முக்தி கிடக்கும் என்ற நம்பிக்கையின் ஆதாரத்தில் நடக்கும் தொழில்முறையான தானம். மற்றொரு பக்கம் அரை வயிறு கஞ்சிக்கு வழியின்றி கோயிலுக்கும் சடங்கு செய்வதற்கும் வரும் பணக்காரர்களிடம் கெஞ்சி, கூத்தாடி, தன் மானத்தை விட்டுக்கொடுத்து, கையில், காலில் விழுந்து மனதை உறுக்கும் வகையில் கேட்கப்படும் தானம். இரந்து உண்ணுவதிலும் ஏற்றத் தாழ்வு இருப்பதைப் பார்த்து இன்றும் நெஞ்சு பதபதைக்கிறது. அன்று ஆட்டோவில் அழுதுகொண்டே எங்கள் பின்னால் ஓடிவந்த சிறுமியைப் பார்த்த போது அவள் கண்களிலும் என் கண்களிலும் ஒரு சேர கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
Comments
Post a Comment