நான் ஏன் பெட்டியை நகர்த்த வேண்டும்? மோதியா வருகிறார்?
இன்று காசியில் மூன்றாம் நாள். காலையில் பல சடங்குகளும், முன்னோர்களுக்கான மரியாதைகளும் இந்து மத வழிப்படி நடைபெற்றது. அதைப் பற்றி நான் அதிகம் எழுதவேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். அந்த சடங்குகளின் அர்த்தமற்ற தன்மையும், காலத்துக்கு முற்றிலும் ஒத்துப் போகாத நிலையும் அவற்றின் மேல் எனக்கு சற்றும் மரியாதையும் ஈடுபாடும் இல்லாமல் செய்துவிட்டன. காலை 6.30 மணி தொடங்கி 1.30 மணி வரை ஏதேதோ அர்த்தம் தெரியாத மந்திரங்கள் ஓதப்பட்டன. ஏதேதோ அர்த்தம் புரியாத சடங்குகள் நடத்தப்பட்டன. அதனால் அதைப் பற்றி எழுதுவதை நான் விட்டுவிடுகிறேன். இது எல்லாவற்றிற்கும் இடையே ஒரு நல்ல விஷயம் நடந்தது. கங்கையில் விசைப் படகில் சென்று அப்பா அம்மா சடங்குகள் செய்துகொண்டிருக்கும்போது அந்த படகு சவாரியின் அழகை இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த பதிவில் நான் முக்கியமாக எழுத முயற்சி செய்வது வாரணாசியிலிருந்து கயாவிற்கு சென்றுகொண்டிருக்கும் இரயில் பயணத்தைப் பற்றி தான். நாங்கள் வாரணாசியிலிருந்து ராஞ்சி செல்லும் வந்தே பாரத் இரயிலில் பதிவு செய்திருந்தோம். வந்தே பாரத் இரயில் ஒரு சொகுசு இரயில் வண்டியாகும். அதன் டிக்கெட் விலையும் அதிகம். அதனால் எல்லாம் சௌகரியமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். 4 மணிக்கு வண்டி. அதனால் விடுதியை விட்டு 2.45 மணிக்கே கிளம்பி ஆட்டோ பிடித்தோம். அட்டோவில் இரயில் நிலையம் வந்து சேர 3.15 ஆகிவிட்டது. வாரணாசி இரயில் நிலையம் மிகப் பெரியது. மொத்தம் 9 நடை மேடைகள் இருந்தன. நாங்கள் முதலாம் நடைமேடை இருந்த இடத்தில் வந்து ஆட்டோவில் இறங்கினோம். எங்கள் இரயில் வண்டி 7ஆம் நடை மேடையில் இருந்தது. எங்களிடம் 3 பெட்டிகளும் 3 பைகளும் இருந்தன. இவற்றைத் தூக்கிக்கொண்டு படிகள் ஏறி, இறங்கி செல்லவேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருந்தது. இரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதலாம் நடைமேடையிலேயே ஒரு 1000 பேர் இருந்திருக்கவேண்டும். அங்கிருந்து படி ஏறினால் ஒவ்வொரு படியிலும் 10-20 பேர் இருந்தனர். பெட்டிகளைத் தலையிலும் கைகளிலும் தூக்கிக்கொண்டு பலர், சிறிய குழந்தைகளை ஒரு கையிலும், பெரிய பெட்டியை இன்னொரு கையிலும் தூக்கிக்கொண்டு பலர், சத்தமாக கதறி அழும் குழந்தைகள், நடக்கவே மறுக்கும் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் சில, அந்தக் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர், நடை மேடையிலேயே சண்டை போட்டு வாக்குவாதம் செய்பவர்கள். இப்படி பல விதமான விஷயங்கள் அந்த இரயில் நிலையத்தில் காணக்கிடைத்தது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலும் நிறைய கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வாரணாசியில் இருந்த அளவு கூட்டத்தை நான் கண்டதில்லை. எங்கு திரும்பினாலும் யார் மீதாவது இடித்துத்தான் ஆகவேண்டும். கூட்டத்தையும் தள்ளுமுள்ளையும் தாண்டிக்கொண்டு எங்கள் இரயில் வண்டியில் ஏறிக்கொண்டோம்.
வந்தே பாரத் இரயில் வண்டிக்கே உறிய சுத்தமும், நேர்த்தியும், வசதியும் இருந்தன. எங்களுக்கு அளிக்கப்பட்ட இடங்களில் அமர்ந்துகொண்டோம். எங்கள் இறுக்கையின் முன்னால் ஒரு வயதான ஆணும், ஒரு இளைஞனும் ஏறினார்கள். அந்த வயதான ஆண் மிகக் கோபமாக இருந்தார். அவர் தன்னுடைய பெரிய பெட்டியை மற்ற பயணிகள் நடந்து செல்லும் பாதையில் வைத்துக்கொண்டார். இளைஞன் அவரைப் பார்த்து, “குருஜி, இப்படி வழியில் பெட்டியை வைத்தால் மற்றவர்கள் எப்படி நடப்பார்கள். அதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.” என்றார். பெரியவர் அந்த இளைஞனைப் பார்த்து கத்தினார், “உனக்கு அறிவு இல்லையா? இந்த வண்டியில் என்ன மோதியா வரப்போகிறார்? அவரைத் தவிற நான் ஏன் மற்றவர்களுக்கு பயப்பட வேண்டும்?” இளைஞனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றி சுற்றி எங்களை எல்லாம் சங்கடத்துடன் பார்த்துவிட்டு அமர்ந்து கொண்டான். அப்போது இரயில் பணியாளர் ஒருவர் அந்த வழியாக செல்ல முயன்றபோது அவரால் செல்ல முடியவில்லை. பெட்டி அவர் பாதையை அடைத்தது. அவர், பெரியவரைப் பார்த்து “இந்த பெட்டியை நகர்த்துங்கள் என்றார்” பெரியவர் ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த இளைஞனைப் பார்த்துத் திட்டினார், “டேய் அறிவு கெட்டவனே...எத்தனை முறை இங்கு பெட்டியை வைக்கக்கூடாது என்று சொன்னேன்? ஏன் இப்படி என் மானத்தை வாங்குகிறாய்?” அவனை அதட்டி அந்த பெட்டியைத் தூக்கி மெலே இருக்கும் பெட்டி வைக்கும் இடத்தில் அதை வைக்கக் கட்டளை இட்டார். இளைஞன் முகத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.அவனுக்கு இந்த நடத்தை பழகிப் போயிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் ஏதும் பேசாமல் பெட்டியைத் தூக்கி மேலே வைத்துவிட்டு அமர்ந்துகொண்டான். எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் அந்த பெரியவர் எதற்கு பிரதமர் மோதியின் பெயரை குறிப்பிட்டார் என்பது தான். மோதி அவர்கள் வந்தால் மட்டும் நான் என் பெட்டியை நகர்த்துவேன் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். பிரதமர் மோடியின் பெயர் ஏன் இப்படிப் பட்ட நடத்தைக்குத் தணிச்சல் அளிக்கிறது? எனக்கு மனதில் தோன்றியவற்றையெல்லாம் நான் செய்யலாம். பிரதமர் மோதி எனக்கான பிரதமர். நான் அவருடைய விசுவாசி. அவரின் விசுவாசிகளை அவர் கைவிடுவதில்லை. அவருடைய விசுவாசியாக இருக்கவர்களுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவருடைய விசுவாசியாக நான் இருந்துகொண்டால் இந்த நாடு எனக்கு வேண்டியதை எல்லாம் எனக்கு வேண்டிய விதத்தில் எனக்கு வேண்டிய நேரத்தில் செய்யக் கடமைப் பட்டுள்ளது. நான் பிரதமர் மோதியின் ஆதரவாளன், நான் அவரின் விசுவாசி, அவரின் பக்தன் என்ற ஒரு அடையாளம் என்னை வெகு தூரம் கூட்டிசென்று விடும் என்ற ஒரு நினைவு பலர் மனதில் இருப்பதால் தான் அந்த முதியவர் அப்படிப் பேசினாரோ. அந்த முதியவருடைய நம்பிக்கை தவறாக இருக்கலாம். அவருக்கு எந்த வித சிறப்பு உதவியும் மோதி அவர்கள் செய்யாமல் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு சாதாரண குடிமகன், பிரதமரின் செல்வாக்கு நம்மை எந்த பிரச்சனையிலிருந்தும் விடுவித்துவிடும் என்ற எண்ணம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆழமாக சிந்தித்துப் பார்க்க வைக்கிறது. தலைவரின் நண்பர்களுக்கான சட்டம் வேறு, மற்றவர்களுக்கான சட்டம் வேறு என்ற செயல்பாடு எந்த நாட்டில் இருக்கிறதோ, அங்குதான் ஒரு குடிமகனக்கு அப்படி நினைக்க துணிச்சல் வரும். ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு இது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
இரயில் வண்டி கிளம்பி வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இரயிலின் வேகத்திலேயே என் எண்ணங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. நாட்டில் இருக்கும் அரசியல், ஜனநாயக நடப்புகள், மக்களின் மன ஓட்டங்கள் இவற்றை அறிந்துகொள்ள இரயில் பயணங்கள் உதவுகின்றன என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்.
Comments
Post a Comment