கலாச்சாரமும் ஆன்மீகமும்

இன்று காலை காசி நகரைப் பார்க்க வந்து சேர்ந்தோம். காசி நகருக்கு வருவதற்கான சரியான நேரம் இது என்று புரிந்தது. வெயில் அதிகம் இல்லை, குளிரும் இல்லை, மிதமான தட்பவெப்ப நிலை. விமான நிலையத்திலிருந்து காரில் நாங்கள் இப்போது தங்கி இருக்கும் விடுதியை நோக்கி பயணித்தோம். கார் பயணம் என்னை விந்தையில் ஆழ்த்தியது. உலகத்தின் மிகப் பழமையான வாழும் நகரம் காசி. பயணம் செய்து வந்துகொண்டிருக்கும்போதே அடுக்கடுக்காக பழமை, புதுமை என்று மாறி மாறி காட்சியளித்தது. நடந்து போவதற்கும், மாட்டுவண்டிகள்,குதிரை வண்டிகள் மட்டுமே செல்வதற்கும் ஏற்ற குறுகலான சாலைகள். அந்த சாலைகளுக்கு இடையே ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள், மற்றும் பன்னாட்டு வணிக வளாகங்கள் என்று பழமையும், அதனூடே பழமையைக் கிழித்துக்கொண்டு வெளியேறத் துடிக்கும் புதுமையும் பின்னிப்பிணைந்து காணப்பட்டன. வாகன நெரிசல் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக தெரிந்தது, இருசக்கர மோட்டார் வாகனங்களும், கார்களும் சாலைகளில் குவிந்து நிற்க அதனிடையே சைக்கிள்களும் இருந்தன, அந்த சைக்கிள்களில் இளம் வயது ஆண்கள், பெண்கள் மற்றும் சில முதியவர்கள் கூட இருந்தனர். சைக்கிளில் செல்பவர்கள் பெரும்பாலானோர் தம் முகங்களை துணியால் கட்டி கண் மற்றும் மூக்கு மட்டும் தெரியுமாறு வைத்திருந்தனர். இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்துக்கொண்டே விடுதி வந்து சேர்ந்தோம். ஹரிச்சந்திர காட் என்று கூறப்படும் கங்கை ஆற்றின் ஒரு படித்துறையின் அருகே ஒரு குறுகிய சந்தில் எங்கள் விடுதி இருக்கிறது. இந்த சந்து எவ்வளவு குறுகியது என்றால் எங்கள் அறையின் ஜன்னலிலிருந்து கையை சற்று நன்றாக நீட்டினால் சந்தின் எதிர் புறம் உள்ள அறையின் ஜன்னல் கதவைத் தொட்டுவிடலாம். ஐந்து அடி எடுத்து வைத்தால் சந்தைக் கடந்துவிடலாம். இவ்வளவு குறுகலான சந்தில் இந்த விடுதி அமைந்திருக்கிறது. பரபரப்பாக இருக்கிறது. இதை நான் எழுதும்போது மணி 12.30 நள்ளிரவு, ஆனால் இன்னும் சந்தில் சத்தம் ஓயவில்லை. பரபரப்பாகவே இருக்கிறது. விடுதியில் எங்கள் அறை நான்காவது மாடியில் உள்ளது. நல்ல வேளையாக மின்தூக்கி செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கள் அறை மிகச் சிறியது. ஆனால் வசதியாக இருக்கிறது. சுத்தமாக இருக்கிறது. இதற்கு மேல் வேறெதுவும் எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் வந்து சேர்ந்ததும், சுடச்சுட நம் ஊர் சாதம், சாம்பார், ரசம், பொரியல் என்று சாப்பாடு தயாராக இருந்தது. பசியாற சாப்பிட்டுவிட்டு சற்று படுத்து ஓய்வெடுத்தோம். 

 

மாலை 5 மணிக்கு விடுதியின் கீழே இறங்கி தேனீர் கிடைக்குமா என்று தேடினேன். ஒரு 10 அடி நடந்ததும் ஒரு சிறிய தேனீர் கடை தென்பட்டது. அதன் சொந்தக்காரர் சந்தனப் பொட்டு வைத்துக்கொண்டுவாயில் பான் போட்டுக்கொண்டு வெள்ளை பஞ்சகச்ச வேட்டிவெள்ளை சட்டை போட்டுக்கொண்டு தேனீரை ஆற்றிக்கொண்டிடுந்தார். அவரிடம் சென்று “பையாசாய் பார்சல் மிலேகா கியா?” என்று கேட்டேன். ஆம் என்று தலையாட்டிவிட்டு 3 பேருக்கான தேனீரை ஒரு கவரில் ஊற்றி அதைப் பருகுவதற்கு 3 மண் குவளைகளையும் கொடுத்தார். அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சிரித்த முகம்பரபரப்பான வேலை செய்யும் திறன்கடையின் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தாமதம் இல்லாமல் கையாளும் நேர்த்தி என்று சிறப்பான ஒரு வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் வியாபாரியாக அவர் தென்பட்டார். தேனீரை வாங்கிக்கொண்டு வந்து அறையில் நாங்கள் அதைப் பருகும்போது அவர் அந்த தேனீரை தேயிலைபால்சர்க்கரை மட்டுமில்லாமல் அன்பையும் அரவணைப்பையும் சேர்த்து கலந்திருப்பாரோ என்று தோன்றியது. அப்படி ஒரு சிறப்பான தேனீரை நான் அருந்தியதே இல்லை. இரசித்துருசித்து அந்த தேனீரைப் பருகினோம். 

 

அதன் பின் கங்கை ஆற்றின் ஆரத்தி எடுக்கும் அந்த நிகழ்ச்சியைக் காண அஸ்ஸி காட் எனப்படும் படித்துரைக்குக் கிளம்பினோம். ஆட்டோவில் ஏறி சந்துபொந்துகளில் வளைந்து நெளிந்து படித்துரையை வந்தடைந்தோம். படித்துரையில் நிறைய படிகள் செங்குத்தாக இருந்தன. இவ்வளவு படிகள் இருப்பதைப் பார்த்தால் ஒரு காலத்தில் கங்கை ஆறு இவ்வளவு ஆழத்தில் ஓடியிருக்கலாம்இன்று தண்ணீர் குறைந்து இந்த இடம் வெறும் படிகளாய் உள்ளது என்று தோன்றியது. எங்களுடன் துணைக்கு வந்திருந்த காசியைச் சேர்ந்த தீரஜ் அவர்கள் இப்போது கூட சில நேரங்களில் அதிக மழை பெய்து வெள்ளம் வந்தால் படிகள் எல்லாம் நிரம்ப்பி விடும் என்று கூறினார். கங்கை ஆரத்தி நடக்கும் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்று வசதியான ஒரு இடத்தில் எங்களை அமர வைத்தார். எங்கள் முன்னால் ஒரு சிறிய வணிக உலகம் பரந்து விரிந்து காட்சியளித்தது. கங்கையில் படகு சவாரி செய்ய விரும்புகிறவர்களை சிலர் அணுகி 500-600 என்று ஒரு நபருக்கான கட்டணத்தை பேரம் பெசிக்கொண்டிருந்தனர். பூஅகல் விளக்கு எல்லாம் விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. எலுமிச்சை தேனீர் கோப்பைகளில் விற்பனை செய்துகொண்டிருந்தனர். மணி 6ஐ நெருங்க நெருங்க கூட்டம் குவிந்துகொண்டிருந்தது. சுமார் 6.30 மணிக்கு ஒலிபெருக்கியில் ஆரத்தி தொடங்கவிருப்பதாக அறிவித்தனர். 

 

ஆரத்தி தொடங்குவதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன் ஒரு நாகா துறவி ஒருவர் உடலில் ஒரு பொட்டு துணி இல்லாமல்உடல் முழுவது விபூதியைப் பூசிக்கொண்டு கையில் மயிலிரகை எடுத்துக்கொண்டு எங்கள் அருகே வந்தார். மயிலிரகால் எங்கள் தலையில் 5 முறை தட்டிவிட்டு அவர் எங்களை விரித்து பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். காசு எதிர்பார்த்திருந்தார் போலும். நாங்கள் வேறு திசையில் திரும்பிக்கொண்டோம். அவர் நின்றிருந்த அந்த கோலத்தில் அவரை பார்க்கவே சங்கடமாக இருந்தது. அவருக்குக் கோபம் வந்து எங்களிடம், “மனா கரோகேமனே கரோகேமனா கரோ...” என்று மிரட்டினார். (மறுப்பாயாமறுப்பாயாமறுத்துப் பார்!) நாங்கள் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியே அமர்ந்திருந்தோம். அவர் கோபமாக விலகிச் சென்றுவிட்டார். கண்டிப்பாக இது ஏதோ ஏமாற்று வித்தை என்று தோன்றியது. என்ன செய்வது இப்படிப்பட்ட இடங்களில் ஏமாற்றும் இன்றியமையாத அங்கமாக ஆகிவிட்டது. இந்த நிகழ்வு நடந்த ஒரு 10 நிமிடங்களில் ஆரத்தி தொடங்கியது. 




 

கங்கை ஆரத்தி என்ற நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். வெளி நாட்டு பயணிகள் காசிக்கு வரும்போது அவர்கள் பெரிதும் இரசித்து பார்க்கும் ஒரு கலாச்சார நிகழ்வாக அது இருக்கிறது. ஒவ்வொரு படித்துரையிலும் 7 மேடைகள் அமைத்து அந்த மேடைகளில் ஆரத்தி செய்யும் ஒருவர் பட்டாடை அணிந்து நேர்த்தியாக இசைமேள தாளங்கள் முழங்க தூபம்தீபம்மற்றும் ஆரத்தி அசைத்து காட்டுகிறார். அவரின் அசைவுகளில் நடனம் போன்ற நேர்த்தி தெரிகிறது. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறதி. வெளிநாட்டவர்களுக்கு இந்த அழகான காட்சி காசியின் பழமையும்புதுமையும் கலந்த கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்த நிகழ்ச்சியைக் காணக் கூடியிருந்த அத்தனை பேரின் கைகளிலும் கைப்பேசி காமெராக்கள் இருந்தன. அனைவரும் அந்த நிகழ்வை பார்த்தார்களோ இல்லையோ தத்தம் கைப்பேசிகளில் அதை பதிவுசெய்துகொண்டிருந்தனர்என்னையும் சேர்த்து தான். சிலர் காணொலி அழைப்பில் அந்த நிகழ்ச்சியைத் தம் குடும்பத்தாருக்குக் காட்டிக்கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் நாம் நிகழ் காலத்தில் முழுமையாக எங்கு ஈடுபடுகிறோம். இல்லாத ஒரு எதிர்கால நினைவுக்காக எல்லாவற்றையும் வேக வேகமாக பதிவல்லவா செய்துகொண்டிருக்கொறோம்அங்கு கூடியிருந்த கூட்டமும்அதிகமான சத்தமும்எனக்கு ஒரு வித அமைதியின்மையை ஏற்படுத்தின. ஆரத்தி முடிவதற்கு முன்பே நாங்கள் அங்கிருந்து கிளம்பி அறைக்குத் திரும்பிவிட்டோம். 

 

ஒரு காலத்தில் ஆன்மீகமும் கலாச்சாரமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும். கலைஇசைநடனம்கலாச்சாரம் எல்லாம் ஆன்மீக சிந்தனையை தூண்டுவதற்கும்இறையுணர்வை வளர்ப்பதற்கும் உதவி செய்தன. ஆன்மீகத்தில் மனதை ஒன்ற வைக்கவேண்டும் என்றால் ஆரம்ப நிலையில் அதற்கு ஒரு பற்றுதல் தேவைப்படுகிறது. கலை அந்த பற்றுதலாக இருந்திருக்கும். பாடல்கள் மூலமும்நாட்டியம் மூலமும்கவிதைகள் மூலமும் ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைந்த பல கலைஞர்கள் வரலாற்றில் உண்டு. காலம் போகப் போக ஆன்மீகம் குறைந்து இதில் பல நிகழ்வுகள் கலாச்சார நிகழ்வுகளாகி நிற்கின்றன. இது தவறு என்பது என் வாதம் அல்ல. கலைகலாச்சாரம் எல்லாமே அவசியம் தான். அதில் உள்ள அழகியல் நம் இரசனையைத் தூண்டுகிறதுநம் மனதை மகிழ்விக்கிறது. ஆனால் கோவில்களில் ஒரு காலத்தில் இறையுணர்வை வளர்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள்அதில் இருந்த இறையுணர்வு குன்றி கலை வடிவங்களாக மட்டுமே எஞ்சி நிற்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. இந்த எண்ணங்களுடன் இரவு தூங்கப் போகிறேன். நாளை விடியற் காலையில் எழுந்து கோவில்களுக்குச் செல்வது திட்டம். நாளை எழுதுகிறேன்! 

Comments

Popular posts from this blog

Rebuilding trust in communities

Skills passed down through ages

Misappropriation versus Representation