பிரம்மாவும் புறாவும்

 மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் என் மனதிற்கு அமைதியும் இதமும் அளிக்கும் இடம். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வாரம் ஒரு முறையாவது செல்வது வழக்கம். சில வருடங்களுக்கு முன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் செல்வது வழக்கமாக இருந்தது. பிறகு வெள்ளிக்கிழமைகள் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் சனிக்கிழமைகள் செல்கிறேன். கோயில் வாயிலில் இருக்கும் பூக்கார அம்மா எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டில் புதுத் துணி எடுக்கும்போது கண்டிப்பாக காமாட்சிக்கும் ஒரு சேலை எடுப்பது வழக்கம். வேலை கட்டாயங்கள் அல்லது வெளியூர் பயணம் காரணமாக கோயிலுக்கு ஒரு வாரம் போகவில்லை என்றால் காமாட்சியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துவிடும். இப்படிப் பட்ட உறவுகள் ஏற்படுவது கோயில் போவதில் கிடைக்கும் கூடுதல் நன்மை. 


 

கோயிலில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக் கூட்டங்கள் வெவ்வேறு விதமாக இருக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு விளக்கு ஏற்றும் பக்தர்கள் அதிகம் வருவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை அதிகமாகக் காணலாம். தட்சிணாமூர்த்தி ஆசிரியர் என்பதால் அவரிடம் அருள் பெற மாணவர்கள் வருவார்கள். வெள்ளிக்கிழமைகள் பட்டுப்புடவையும், குங்குமம்,மல்லிப்பூவும் அணிந்துகொண்டு பெண்கள் அதிகம் வருவார்கள். அம்மன் சன்னிதியின் முன் கூட்டம் அதிகம் இருக்கும். சனிக்கிழமைகள் இளம் வயது கூட்டம் அதிகம் இருக்கும். நவக்கிரக சன்னிதியில் சனி பகவானுக்கு அர்ச்சனை நடக்கும். அதுமட்டுமில்லாமல் அனுமான் சன்னிதியில் பலர் வெற்றிலை மாலை சாத்துவதும் உண்டு. இப்படிப்பட்ட விதவிதமான மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது வாழ்கை சூழலுக்கும், வயதிற்கும் ஏற்றார்போல் கோயில் எப்படி எல்லோருக்கும் பொதுவான ஒரு இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணி வியக்கவைக்கிறது. அவரவர் தேவைகள், மனநிலைகள் மற்றும் வேண்டுதல்களுக்கு உகந்த நாட்கள், சன்னிதிகள், நம்பிக்கைகள் எல்லாம் அழகாக அமைக்கப்பட்ட ஒரு இடம்தான் கோயில். 

 

இன்று கோயில் பிரகாரங்களை வணங்கிவிட்டு நவக்கிரக சன்னிதிக்கு அருகே இருக்கும் இடத்தில் அம்மாவும் நானும் வந்து அமர்ந்துகொண்டோம். அங்கே அமர்ந்து அபிராமி அந்தாதியின் 100 பாடல்களையும் மாறி மாறி பாடுவது எங்கள் வழக்கம். முதல் பாடல் நான் பாடுவேன், அதிலிருந்து தொடர்ந்து இரண்டாவது அம்மா பாடுவார், அதிலிருந்து மூன்றாவது நான் என்று மாறி மாறி பாடுவோம். எங்கள் இருவருக்கும் பாடல் மனப்பாடம் என்பதால் புத்தகம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பல வருடங்களாக நாங்கள் பாடி வருவதனால் வேறெங்கோ கவனம் இருந்தாலும் வாய் பாடலை விடாமல் பாடிக்கொண்டிருக்கும், அந்த அளவிற்கு மனதில் இந்த பாடல் ஊறிவிட்டது. அங்கு அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து கோபுரம் அப்படியே கண் முன் தெரியும். கோபுரத்தில் பிரம்மா தியான நிலையில் அமர்ந்திருக்கும் சிலை தெரியும். இன்று பாடிக்கொண்டுருக்கும்போது அந்த சிலையில் கவனம் சென்றது. சூரியன் மறைந்துகொண்டிருந்த மாலை நேரம். மஞ்சள் வெயில் பிரம்மாவின் முகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அந்த வெயில் அடிப்பதைப் பார்த்தால் எனக்கு கண் கூசியது, அனால் பிரம்மாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர் எப்போதும் போன்ற அதே ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது 5 புறாக்கள் பறந்து வந்து பிரம்மாவின் தலை, தொடை, தோள் ஆகிய இடங்களில் வந்து அமர்ந்துகொண்டன. சுற்றி சுற்றி பறந்து, மறுபடியும் வந்து அமர்ந்துகொண்டன. அந்த புறாக்களுக்குத் தெரியுமாஅவர்கள் பிரம்மாவின் மேல் அமர்ந்திருக்கிறார்கள் என்றுகோயில் கோபுர உச்சியில் இருக்கிறோம் என்றாவது தெரியுமாதூரத்திலிருந்து தெரியும்போதே மனதில் பக்தியை ஏற்படுத்தும் அந்த மாபெரும் கோபுரத்தில் தான் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அவற்றுக்குத் தெரியுமாநாம் எல்லோரும் ஒரே காட்சிகளைத் தான் காண்கிறோம் ஆனால் ஒவ்வொருவருக்கு அந்த காட்சி ஒவ்வொறு அனுபவம் தருகிறது. அது நாம் அந்த காட்சியுடன் தொடர்பு செய்யும் மதிப்பைச் சார்ந்து இருக்கிறது. கோயிலில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. வட மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அன்னதான மண்டபம் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் இரு இளைஞன் தமிழ் எழுத்துக்களுக்கு அழகாக சாயம் தீட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு “அன்னதானம்” என்ற சொல் அது என்று தெரியுமாஅன்னதானம் என்றால் என்ன என்று தெரியுமாஅவன் தன் பணியை சிறப்பாக நிறைவேற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு அது அவன் பணி. அந்த புறாவுக்கு அது பிரம்மா அல்லஅது உட்காரும் இடம். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பல கேள்விகள் மனதினுள் எழுந்தன. 

 

“சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்

புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள்

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே”

 

என்று அபிராமி அந்தாதியில் ஒரு பாடல் வரும். இதில் அபிராமி பட்டர் “சொல்லும் பொருளும் என நடமாடும்...” என்று சிவனையும் அபிராமியையும் கூறியிருப்பார். சிவன் சொல் என்றால் அபிராமி அதன் பொருள். பொருள் இல்லாமல் சொல்லுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சொல்லையும் அதன் பொருளையும் பிரித்து பார்க்கவே முடியாது. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும்அந்தந்த சூழ்நிலைக்கேற்ற பொருளோடு சேர்ந்து தான் சொல் இருக்கும். அந்த வட மாநில இளைஞனுக்கு அன்னதானம்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியாது. அது அவனுக்கு வெறும் வரைபடம் தான்எனக்கோ அன்னதானம் என்ற சொல் அறத்தை குறிக்கிறதுநன்மையைக் குறிக்கிறதுகோயிலின் சமூகப் பணியைக் குறிக்கிறது. சொல்லுக்குப் பொருள் எப்படி முக்கியமோநம்மைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் பொருட்களுக்கும் கூட அதன் பொருள் அல்லது மதிப்பு இன்றியமையாதது. 

 

இப்படியே சிந்தனை சென்றுகொண்டிருக்கும்போது அபிராமி அந்தாதியின் மிகச் சிறப்பான ஒரு பாடல் வந்தது. அதுவரை இந்த சிந்தனைகளில் சிதறிக்கிடந்த கவனம் திடீரென்று பாடலுக்குள் நுழைந்தது. 

 

“பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்

ஊரும் முருகு சுவை ஒளி ஊரொலி ஒன்று பட

சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே”

 

இந்தப் பாடலில் அபிராமி பட்டர் பல நரம்பியல் நிபுணர்கள் இன்றுவரை புதிராகக் கருதும் ஒரு மாயத்தைஅறிவியலால் கண்டுகொள்ள முடியாத ஒரு அதிசயத்தை சிவகாம சுந்தரியாகிய அபிராமி அம்மைதான் நடத்துகிறாள் என்று கூறுகிறார். இந்த உலகத்தை நாம் உணர்ந்து கொள்ள உதவும் ஐம்புலன்களாகிய பார்வைநுகர்வுகேட்டல்சுவைதொடு உணர்வு மற்றும் இவற்றை நமக்கு வெளிப்படுத்தும் நிலம்நீர்காற்றுஆகாயம்நெருப்பு ஆகிய ஐம்பூதங்களும் ஒன்றோடொன்று இணைந்து நமக்கு உலக மாயை ஏற்படுத்தி அதன் மூலம் இன்பம்துன்பம்எல்லாவற்றையும் ஏற்படுத்துகின்றன. இன்று மருத்துவ அறிவியல் இதெல்லாம் நரம்பு மண்டலத்தில் நடைபெற்று மூளையில் உணரப்படுகிறது என்று கூறுகிறது. மூளையில் இந்த உணர்வுகள் ஏற்படும்போது அது உணர்ச்சிகளையும் கிளரி விடுகிறது. இதெல்லாம் எப்படி நடக்கிறதுஎல்லோருக்கும் ஒரே விதமாகத் தான் நடக்கிறதாஅபிராமி அம்மையின் பச்சை நிறம் எனக்கு எப்படி தெரிகிறதோஅப்படித்தான் அபிராமி பட்டருக்கும் தெரிந்ததாஇந்த விந்தைகள் எல்லாம் அபிராமி நடத்துகிறாள் என்று பட்டர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார். இந்த பாடல் வரும்போதெல்லாம் நான் அதிசயத்தில் ஆழ்ந்து விடுவேன். இறை உணர்வு என்பதை என்னால் வார்த்தைகளில் இப்படி எழுத முடிகிறதுநண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த உணர்வை மற்றவர்களுக்குள்ளே கடத்த முடியுமாஅதோ பாருங்கள் அபிராமி அம்மை என்று கண் முன் நின்றால் சுட்டிக் காட்டலாம். மனதில் இருக்கும் காட்சியை எப்படி காட்டுவதுகண் முன் இருக்கும் காட்சியே அனைவருக்கும் ஒரே விதமாகத் தான் தெரிகிறதாஇந்த கேள்விகள் மனதில் தோன்றி விந்தையில் ஆழ்ந்திருந்தபோது படபடபட என்று சிறகடித்து அந்த ஐந்து புறாக்களும் பிரம்மாவை விட்டு கிளம்பி பறந்து சென்றன. என் சிந்தனைகள் கலைந்தன. அபிராமி அந்தாதியின் 100 பாடல்களும் முடிந்தன. அம்மாவும் நானும் கிளம்பி வீடு வந்து விட்டோம். இறையுணர்வுக்கும் அறிவியலுக்கும் ஆழ்ந்த தொடர்பு இருப்பதை ஒவ்வொறு கோயில் வருகையும் எனக்கு உணர்த்துகிறது. 

 

Comments

Popular posts from this blog

Skills passed down through ages

Misappropriation versus Representation

Injustice bites