திருக்கழுகுன்றம் கோயில் அனுபவங்கள்
செவ்வாய், வியாழன், ஞாயிறு நாட்களில் திருக்கழுகுன்றம் சென்று ரூசக் மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்து வருகிறேன். காலை 5.30 மணி மின் தொடர் வண்டியைப் பிடித்தால் 7.15 மணிக்கு செங்கல்பட்டு. 7.30 மணி பேருந்தைப் பிடித்தால் 8.00 மணிக்கு திருக்கழுகுன்றம். பேருந்து அந்த சிறிய டவுனுக்குள் நுழையும்போதே கம்பீரமாக கோயில் கோபுரம் காட்சியளிக்கும். அதுவரை ஏதேதோ சத்தங்கள் நிரம்பியிருந்த மனது சட்டென்று அமைதியாகிவிடும். பேருந்து ஊருக்குள் நுழைய கோபுரம் பெரியதாகிக்கொண்டே வரும். பேருந்து நிலையத்தில் வந்து பேருந்து நிற்கும்போது கோபுரம் மறைந்துவிடும். அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்கள் அதை மறைத்துவிடும். ஆனாலும் தான் இருக்கிறோம் என்ற உணர்வை அந்த கோபுரம் மனதில் பதித்துவிட்டதால், மனக்கண்களில் அந்த கோபுரம் தெரிந்துகொண்டே இருக்கும்.
பேருந்திலிருந்து இறங்கி ஒரு 300 அடி வேகமாக மலைச்சரிவில் நடந்து / ஓடிச் சென்றால் கோவில் வாயில் வந்துவிடும். கோயில் செல்லும் வழி முழுதும் மலர் மாலைகள் செய்யும் கடைகள். ரோஜா, சாமந்தி, சம்பங்கி, மல்லிகை ஆகிய மணங்கள் கலந்து காலை காற்றுடன் சேர்ந்து வீசும். தேரடி வீதியில் இரண்டு பக்கமும் இன்னும் திறக்கப்படாத கடைகள். கடை வாசலில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் குரங்குக் கூட்டங்கள். குறுகிய அந்த சாலையின் நடுவில் மாடுகள் கம்பீரமாக நடந்துகொண்டிருக்க, “பா...பா...” என்று அவற்றை ஓட்டிக்கொண்டு செல்லும் சிறுவர்கள் என்று காலைப் பொழுதின் சோம்பேரித்தனமும், பரபரப்பும் கலந்த காட்சி கண்முன் விரியும்.
கோவில் வாசலில் என்றும் அமர்ந்திருக்கும் ஒரு அம்மா. வினாயகர் சன்னித்திக்கு முன் அவர் அமர்ந்திருப்பார். அவரைத் தாண்டித்தான் வினாயகரை பார்க்கமுடியும். அந்த அம்மாவிற்கு அவ்வப்போது வருவோர் போவோர்கள் காசு கொடுப்பார்கள். அவர் யாரையும் காசு கேட்பதில்லை. தானாக யாராவது கொடுத்தால் வாங்கி வைத்துக்கொள்வார். அந்த அம்மாவையும், வினாயகரையும் தாண்டி கோயிலுக்குள் சென்றால் கோயில் நிலைப்படியில் ஒரு சிவனடியார் அமர்ந்திருப்பார். அவர் கைப்பேசியில் தேவாரம் ஓதல் ஒலித்துக்கொண்டிருக்கும். அவரைத் தாண்டி கோயிலுக்குள் செல்லவேண்டும். முதலில் பக்தவத்சலேஸ்வரர் சன்னிதி. உள்ளே லிங்க வடிவில் சிவன் அமைதியாக அமர்ந்திருப்பார். சில நாட்கள் மனது அமைதியாக இருக்கும், அப்போதும் அவர் அமைதியாக அமர்ந்திருப்பார். பல நாட்கள் ஏதேதோ சிந்தனைகள் வந்து மனது அலைபாய்ந்துகொண்டிருக்கும், அப்போது மனதினுள் பெரிய ஓசை கேட்டுக்கொண்டிருக்கும், அவரோ அதே அமைதியுடன் அமர்ந்திருப்பார். நம் மன நிலை எப்படி இருந்தாலும் அவர் ஒரே நிலையில் அமர்ந்திருப்பார். அந்த லிங்க வடிவத்தைப் பார்த்ததுமே ஒரு விதமான அமைதி மனதினுள் பரவும். உலகமே ஒரு சினிமா திரை போன்றது, அதில் என்னதான் காட்சிகள் வந்தாலும், திரைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. காட்சிகள் வந்து வந்து மறையும், திரைச்சீலை அப்படியே நிலையாக இருக்கும். அதேபோல சிவலிங்கம் அமைதி காத்து கம்பீரமாக அமர்ந்திருக்கும். அர்ச்சகர் விபூதியை எடுத்து கையில் தருவார். அதை எடுத்து நெற்றியில் அகலமாக வைத்துக்கொள்ளும்போது உள்ளே இருக்கும் சிந்தனைகளைத் துடைத்து சுத்தம் செய்து அந்த நாளை சந்திக்கத் தயாராகும் தெளிவு ஏற்படும்.
சிவனின் பிரகாரத்தைச் சுற்றும்போது தென் திசையில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கும். இருட்டாக இருக்கும் அந்த இடத்தில் ஒன்றிரண்டு அகல் விளக்குகள் மட்டும் எறியும். அந்த அகல் விளக்கின் மந்தமான ஒளியில் தட்சிணாமூர்த்தி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருப்பார். அந்த இடத்தில் அகல் ஒளியும், ஊதுபத்தி மணமும், அமைதியும் நிரம்பி தியான நிலை கைகூடும் சூழல் நிலவும். பிரகாரத்தைச் சுற்றி வந்தால் சுவற்றில் “நமகச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்று மாணிக்கவாசகரின் சிவபுராணம் பதிக்கப்பட்டிருக்கும். நான் செல்லும் பெரும்பாலான நாட்களில் சிவனையும், அர்ச்சகரையும், என்னையும் தவிர அங்கு யாரும் இருப்பதில்லை. சில விசேஷ நாட்களில் கூட்டம் இருக்கும். எல்லோரும் சிவபுராணம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து சொல்லும்போது ஒரு வித மன நிறைவு கிடைக்கும்.
சிவன் சன்னிதியை விட்டு வெளியே வரும்போது ஆன்மீக சிந்தனைகள் தழைக்க சில முக்கியமான சன்னிதிள் காட்சியளிக்கும். இதில் ஆத்மநாதர் சன்னிதி என் மனதை மிகவும் கவர்ந்த, என் மனதை ஒருநிலைப் படுத்தும் சக்தி வாய்ந்த சன்னிதி. ஆதமநாதர் அருவமாக வழிபடக்கூடிய சிவன். ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துரை என்ற ஊரில் அமைந்த பாடல் பெற்ற தலம் ஆத்மநாதர் கோயில். இங்கு சிவனுக்கு உருவம் இல்லை. அருவ வழிபாடு என்பது ஆன்மீகத்தின் உயர்ந்த நிலையை உணர்த்துகிறது. இறைவனுக்கு வடிவம் இல்லை. இறை உணர்வு என்பது நமது மனதில் தோன்றும் ஒரு உணர்வு. அன்பே சிவம்! என்ற தத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த ஆத்மனாதர் சன்னிதியில் நிற்கும்போது பல நாட்கள் நான் என்னை மறந்திருக்கிறேன். வெளியில் உள்ள பிரகாரங்களைக் கண்டு வணங்கி முருகன் சன்னிதியையும் வணங்கிவிட்டு வடக்கு பக்கமாக வரும்போது அங்கே அன்னை திரிபுரசுந்தரி வீற்றிருக்கிறாள்.
என்னதான் திருக்கழுகுன்றம் சிவன் கோயிலாக இருந்தாலும், எனக்கு அது திரிபுரசுந்தரி அம்மா கோயில்தான். சிறுவயதில் விடுமுறை நாட்களில் பரபரப்பான வாழ்கையிலிருந்தும் பள்ளிப் படிப்பின் கிடுக்கிப்பிடியிலிருந்தும் தப்பித்து ஓடும் இடம் பாட்டி வீடு. சென்னை டி-நகரில் இருந்த அந்த வீடு என் மாமாவின் வீடு. அதில் தாத்தாவும் பாட்டியும் மாமா, மன்னியுடன் தங்கி இருந்தார்கள். மாமா தலை எடுக்கும் முன் அங்கு தாத்தாவின் அரசாங்கம் தான். ஆனால் பேரப்பிள்ளைகளான எங்களுக்கு அது பாட்டி வீடுதான். பாட்டி இறந்து 15 வருடங்களுக்கு மேலாகிறது, இன்றும் அந்த டி-நகர் வீடு பாட்டி வீடுதான். பாட்டி என்பவள் அன்பினாள் அரசாள்பவள். அன்பை வாரி வாரி வழங்கி எல்லோரையும் அதனால் கட்டிப்போட்டுவிடுபவள். தாத்தா, மாமா, மன்னி, அம்மா, எல்லோர் மீதும் அளவில்லா அன்பு காட்டுபவள். அதிகாரத்தைக் கூட எதிர்த்து விடலாம், அளவுகடந்த அன்பை எப்படி எதிர்ப்பது? அதனால் அந்த வீட்டில் எப்போதுமே பாட்டி அரசாங்கம் தான். அது பாட்டி வீடு தான். அதே போல் திருக்கழுகுன்றம் கோயில் எனக்கு என்றுமே திருபுரசுந்தரி அம்மா கோயில்தான்.
அம்மா நின்ற கோலத்தில் காட்சியளிப்பாள். நல்ல ஐந்தடி ஆள் உயரம். பெரும்பாலான நாட்கள் 9 கஜம் பட்டுப் புடவை மடிசார் பாணியில் கட்டியிருப்பாள். பல நாட்கள் எண்ணற்ற மலர் மாலைகள் அணிந்திருப்பாள். அழகே வடிவமாயிருப்பாள். சில நாட்கள் ஒரே ஒரு மல்லிப்பூ மாலை மட்டும் அணிந்திருப்பாள். அந்த நாட்களில் எனக்கு மிக நெருக்கமான அம்மாவாகக் காட்சியளிப்பாள். தனியாக நின்றிருப்பாள். ஒரு கையில் அருள் காட்டுவாள், மற்றொரு கையால் என் காலில் பணிந்துவிடு என்று சைகை காட்டிக்கொண்டு நின்றிருப்பாள். அருகிலே சென்று பார்த்தால் முகத்தில் கண், மூக்கு, வாய் என்ற எந்த அடையாளங்களும் இன்றி இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் அம்மா அப்படியே அங்கு கண்கூடாக நின்றிருப்பது போலிருக்கும். குங்குமும், சந்தனமும், கடம்ப மலர்களும், தாழம்பூவும் சேர்ந்து மணம் கமழும். அன்னையின் சன்னிதியைச் சுற்றி அபிராமி அந்தாதி சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும்.
“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்; நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்; என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே!”
என்று அங்கு சென்று நின்றதும் தன்னிச்சையாக என் மனது துதிக்க ஆரம்பித்துவிடும். எவ்வளவு நாட்கள் அவள் முன் நின்று என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்? எவ்வளவு நாட்கள் நேரம் போனதே தெரியாமல் அவள் முன் அமர்ந்து அவளுடன் வாக்குவாதங்கள் நடத்தியிருக்கிறேன்? எவ்வளவு நாட்கள் சிந்தனைகள் எதுவும் இல்லாமல் அவள் முன் நின்று அவளை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்? இதற்கெல்லாம் எண்ணிக்கையே இல்லை. அம்மன் சன்னிதியின் முன் மண்டபத்தில் அமர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டுருக்கும்போது பெரியசாமி தூரன் அவர்கள் எழுதிய “தாயே திரிபுரசுந்தரி...” பாடல் என் மனதில் ஒலிக்கும்.
“காமதேனு வணங்கும் கருணா ரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவ பரமெனும் தனி
மருந்துடையாய் பிணியெல்லாம் களைவாய்”
என்ற வரிகள் மனதில் வரும்போது, அவள் மருந்தாக இருப்பவள், அவள் என் உடல், மனம் இரண்டின் பிணிகளையும் களைபவள் என்று மனதிற்கு உறுதி வரும்.
மண்டபத்தில் அமர்ந்து வெளியே பார்க்கும் காட்சிகள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு புதிய பாடம் புகட்டும். உலக அறிவை விரிவடையச் செய்யும். இன்று காலை மஞ்சள் பட்டுப்புடவையும் மல்லிகைப் பூ மாலையுமாக நின்றிருந்த அம்மாவை பார்த்து வணங்கிவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்துகொண்டேன். வலது பக்கம் திரும்பினால் அம்மா நின்று என்னைப் பார்த்து புன்னகை பூத்துக்கொண்டிருக்கிறாள். இடது பக்கம் திரும்பினால் சூரிய ஒளி மெல்ல மெல்ல பரவி மண்டபத்தின் முகப்புக்குள் தலை காட்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. ஒளி மெதுவாக பரவ ஆரம்பித்திருந்தது. இருட்டை தள்ளிக்கொண்டே உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. இருளும் ஒளியும் சந்திக்கும் அந்த இடங்களில் ஒரு சிறப்பான தங்கக் கோடு படர்ந்துகொண்டு வந்தது. கண்களை கூசவைக்கும் ஒளிக் கீற்று. அங்கே நின்றிருந்த தூணில் ஒரு பக்கம் ஒளிக்கீற்றின் வெளிச்சம், மறுபக்கம் இருட்டு. இன்னும் சில நேரத்தில் அந்த ஒளி மண்டபம் முழுவதும் பரவி இருட்டே இல்லாமல் செய்துவிடும். அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அந்த தங்க ஒளிக் கீற்று பரவி, இருட்டைத் தள்ளிக்கொண்டே முன்னேறும் மாய வித்தை நடைபெறும். அதைப் பார்க்கும்போது தெரியாத ஒரு விஷயத்தைப் புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது அறியாமை என்னும் இருட்டை எப்படி அறிவு தள்ளிவிட்டு ஒளியைப் பரப்புமோ, அந்த ஒரு பரவச நிலை ஏற்பட்ட உணர்வு வந்தது. அந்த காட்சியில் ஒரு சில வினாடிகள் என்னை மறந்துவிட்டு மறுபடியும் வலது பக்கம் திரும்பினேன். அம்மா அப்படியே நின்றிருந்தாள். அர்ச்சகர் அகல் விளக்கை அவள் முகத்தினருகே காட்டி “ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை...” என்று துதிக்க ஆரம்பித்தார். அப்படியே அந்த காட்சியை என் மனதிற்குள் பதித்துக்கொள்ள கண்களை மூடி அமர்ந்திருந்தேன்.
Comments
Post a Comment