பாலினம் மற்றும் பாலீர்ப்பு: பேசுவோம்! புரிந்துகொள்வோம்!

What does LGBTQIA+ stand for? An evolving glossary - PowerToFly

கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை பாலினம் குறித்த விவாதங்களில் பங்கெடுக்க நேர்ந்தது. பாலினம் குறித்த பேச்சு அதிகரித்திருக்கிறதாஅல்லது நான் தான் அதை அதிகம் கவனிக்கிறேனாஒரு நண்பன் சில நாட்களுக்கு முன் என்னுடன் பேசி தன் மன வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறினான். அவனுடன் ஒரு இனிய மாலை நேரம் ஒரு அழகிய பூங்காவில் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தேன்.

 

“நான் தன்பாலீர்ப்பு உள்ளவன் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். என்னுடைய நண்பன் ஒருவனுடன் எனக்கு காதல் ஏற்பட்டுவிட்டது. அதை அவனிடம் கூறவும் முடியாது. கூறாமல் இருந்தால் எனக்கு தலை வெடித்துவிடும் போல் உள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்று மிகவும் வருத்தப் பட்டுக்கொண்டிருந்தான். 

 

இது போன்ற சூழ்நிலைகளில் நான் அதிகம் பேசுவதில்லை. பேசுபவர்களை மனம் திறந்து பேசவிட்டு அமைதியாகபொருமையாக கேட்டுக்கொண்டிந்தாலே அவர்கள் மனம் அமைதி அடைந்து விடுகிறது. அவர்களுக்கு தாங்கள் பேசுவதைக் கேட்க நம்பிக்கையான ஒரு நபர் தேவைப்படுகிறார். அந்த நபராக நான் இருந்துவிடுவது தான் வழக்கம். அன்று வீட்டுக்கு வந்து அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். காதலைக் கூறுவது என்பது எப்போதுமே கொஞ்சம் மன அழுத்தம் தரக்கூடியது தான். இது போன்ற தன்பாலீர்ப்புக் காதல் அதை விட மிகவும் கடினமாக இருக்கலாம். அந்த நண்பன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். 

 

“நான் என்ன செய்யவேண்டும்எனக்கு அறிவுறை கூறுங்கள்.” எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

 

இரண்டாம் நிகழ்வு அதற்கு ஒரு 10 நாட்கள் கழிந்தபின் ஒரு கல்லூரியில் விழா ஒன்றில் பங்கு பெற அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் ஒரு பிரபல மன நல மருத்துவர். விழா முடிந்து தேனீர் அருந்திக்கொண்டுருந்தோம். அப்போது அவர்தான் சமீபத்தில் அமெரிக்கா சென்று பள்ளிகளில் சிறுவர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரிடையே பேசி பழகிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 


“10-12 வயது சிறுவர்கள் இருந்த ஒரு வகுப்பறைக்கு போனேன். அங்கே இருந்த சிறுவர்களிடம் உங்களின் பாலினம் என்ன என்று கேட்டால் ஒரு 40சிறுவர்கள் தங்கள் பாலினத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இந்த பழக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாகிவிட்டது. பாலினத்தை நாமே தேர்ந்தெடுக்கும் உறிமை நமக்கு உள்ளது என்று கூறிஅதைப் பற்றி பேசிப் பேசி நாமே இந்த நிலமைக்குக் கொண்டுவந்துவிட்டோம். விரைவில் இந்தியாவிலும் இப்படி ஆகப் போகிறது” என்று வருத்தப்பட்டார். கூடி இருந்தவர்களில் சிலர் சிரித்தனர். சிலர் அவர் கூறியதை அமோதித்தனர். எனக்கு அவர் கூறிய விஷயமும்அதை அவர் கூறிய அந்த கேலியான தொனியும் சற்று கோபம் ஊட்டியது.


“மேடம்பேசி பேசி ஆன பிரச்சனை இல்லை மேடம் இது. பேசாமலே அடைந்து கிடந்த பிரச்சனை. இப்போது தான் வெளியே வருகிறது” என்றேன். 


“அப்படியெல்லாம் இல்லை. பேசாம எங்க இருந்தோம். டிரெயின்பஸ்ஸ்டேண்ட் எல்லா இடத்திலையும் பிச்சை எடுத்துகிட்டு தானே இருந்தாங்க அவங்க. அப்புறம் என்ன?” என்று சற்றும் மரியாதை இல்லாமல் திருநங்கைகளைப் பற்றி பேசினார். 

“யாருமே கவனிக்காமஅவங்களை தனியா விட்டதனால தானே மேடம் பிச்சை எடுத்துட்டு இருந்தாங்க. இப்பவாவது அவங்கள பத்தி பேச ஆரம்பிச்சு இருக்கோமே” என்றேன். 

 

அவர் முகம் கோபமாக மாறியது. கையை இல்லை என்பது போல் வேகமாக அசைத்து, “நான் அப்படி சொல்லவில்லை. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவங்களுக்கு நல்லது செய்ய வேண்டியது தான். அது அரசாங்கம் செய்யட்டும். நான் என்ன சொல்றேன்னாதேவை இல்லாம அதிகமா அதைபத்தி பேசி பேசி இருக்குற நல்ல பிள்ளைங்க கூட வழி மாறி போகுதுங்க. இப்பல்லாம் எனக்கு பாலினம் என்னன்னு தெரியலைன்னு சொல்றது ஒரு கூல் திங்க் (cool thing) ஆயிடுச்சு.”

 

“மேடம்பேசி பேசி எல்லாம் ஒருத்தங்க திருநங்கையோ திருநம்பியோ ஆக முடியாது. என்ன சொல்றீங்க?” என்று சற்று கோபத்துடன் கேட்டேன். 

“நான் ஒரு மன நல நிபுணர்தெரியுமாஇப்படி பாலின குழப்பங்கள்பிரச்சனை உள்ளவங்களோட நிறைய வேலை செஞ்சிருக்கேன். அவங்களை பத்தி எனக்கு நிறைய தெரியும். நீங்க பார்த்து பேசுங்க”

 

அதற்கு மேல் நான் அதிகம் பேசவில்லை. தனக்கு எல்லாம் தெரியும்தன்னை விட அதிகம் தெரிந்தவர் யாரும் இல்லை. தான் நினைத்தது தான் சரி. மற்றவர்கள் கூறுவது தவறு என்ற நம்பிக்கைகள் உள்ளவர்களுடன் விவாதம் செய்வது ஒரு கல் சுவற்றை ஓங்கி ஓங்கி அடிப்பது போன்றது. நம் கைதான் வலிக்குமே தவிரஅவர்கள் கருத்து மாறப்போவதில்லை. அன்று எனக்கு மிகவும் கோபம் வந்தது. மன நலத்துக்கு சிகிச்சை தரும் ஒரு மருத்துவருக்கு பாலினம் குறித்த இப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்தால்அவர் எப்படி சரியான சிகிச்சையை அளிப்பார். ஒருவருடைய சொந்த நம்பிக்கைகள்விருப்பு-வெறுப்புகள் ஆகியவை அவரின் தொழிலையும் பாதிக்கும் அல்லவாமருத்துவராக ஒருவர் இருக்கவேண்டும் என்றால் அவருக்கு பாலினம் குறித்த சரியான புரிதல் இருக்கவேண்டியது அவசியம் அல்லவாஇவற்றை எல்லாம் நினைத்து மனம் வேதனைப் பட்டேன். 

 

நான் ஒரு கல்லூரியில் பேராசிரியனாக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம்வெளியே வேறொரு கல்லூரிக்கு வகுப்புகள் கற்றுத்தரச் சென்றிருந்தேன். ஒரு நாள் முழு நாளும் வகுப்புகள் நடத்திவிட்டு அறைக்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நேரம் என் கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது. “அய்யாதங்களுடன் பேச வேண்டும்தங்களை இப்போது அழைக்கலாமா?” பெயர் இல்லையார் என்றும் தெரியவில்லை. நான் பதில் எதுவும் அளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மற்றொரு தகவல் “நான் இன்று உங்கள் வகுப்பில் பங்குகொண்டேன். மிகச் சிறப்பான வகுப்பு. அது குறித்து தான் தங்களிடம் பேசவேண்டும்.” 


மணி இரவு 10 தாண்டியிருந்தது. “காலையில் பேசலாம்.” என்று பதில் போட்டுவிட்டேன். 

“இல்லை இப்போதே பேசவேண்டும்...ஒரே ஒரு நிமிடம் தான்” என்று பதில் வந்தது. அதற்கு பதில் போடும் முன்னரே என் கைப்பேசி அடித்தது. எடுத்து பேசினேன். சற்று எரிச்சலாக இருந்தது. 

“அய்யாஎன் பெயர் குமார். உங்கள் வகுப்பு மிக சிறப்பாக இருந்தது. நான் உங்களுடன் நெருங்கி பழக விரும்புகிறேன். உங்களை வந்து சந்திக்கலாமா?” 


எனக்கு சற்று குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கைப்பேசியில் பேசியவர் ஒரு ஆண் குரல். அவர் பேசிய விதம் பெண்மை மேலோங்கி இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் பேச்சில் வெட்கம் தென்பட்டது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மரியாதையாக பேச வேண்டும்மற்றும் தவறாக எதுவும் புரிந்துகொண்டுவிடக்கூடாது என்பதால் “காலையில் பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லி கைப்பேசியை அணைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.

 

அடுத்த நாள் குமார் என்று யாரும் வகுப்புக்கு வரவில்லை. மாலையில் நான் அறைக்கு வந்து ஓய்வெடுக்கும் நேரம் அதே எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது, “அய்யாதப்பா நினைக்கவேண்டாம். எனக்கு தங்களை மிகவும் பிடித்திருக்கிறது. நான் உங்களுக்கு பாய் பிரண்டாக இருக்கலாமா?” என்று மிகத் தெளிவாக குமார் தகவல் அனுப்பியிருந்தார். நான் சற்று ஆடிப்போய்விட்டேன். எனக்கு அப்படிப் பட்ட எண்ணம் இல்லை என்று அவர் மனம் புண்படாமல் சொல்லவேண்டும். வெகு நேரம் யோசித்துவிட்டு அவருக்கு கைப்பேசி அழைப்பு செய்தேன். 

 

“குமார். வணக்கம் தம்பி. நீங்க வெளிப்படையா உங்க அன்பை என் கிட்ட சொன்னது ரொம்ப நல்லது. உங்க தைரியத்தை நான் பாராட்டுறேன். எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை தம்பி. என்னை தப்பா நினைக்கவேண்டாம். உங்க அன்பை நான் மனப்பூர்வமா ஏத்துக்குறேன். நாம் நல்ல நண்பர்களா இருப்போமா?” என்றேன். 

 

அன்றிலிருந்து குமார் என் நண்பனானார். இன்று குமார்அமுதாவாக மாறிஒரு கல்லூரியில் பேராசிரியையாகப் பணி புரிகிறார். அவர் பெண்ணாகத் தன்னை மாற்றிக்கொள்ள மருத்துவ ரீதியான உதவிகள்அறுவை சிகிச்சைக்கான உதவிகள்இது எல்லாவற்றுக்குமே நான் என்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறேன். 

இது மட்டுமில்லாமல் என்னுடைய மாணவர்கள் பலர் வெளிப்படையாக தன்னுடைய பாலினம் குறித்தும் பாலீர்ப்பு குறித்தும் என்னுடன் பேசி உறையாட பாதுகாப்பான ஒரு இடத்தை என் கல்லூரி அலுவலக அறையில் அவர்களுக்கு நான் அளித்திருந்தேன். 


இப்படிப்பட்ட சூழலில் அந்த மன நல மருத்துவர் வாதாடியது மிகவும் கோபத்தை அளித்தது. தன் பாலினத்தை மாற்றிக் கொள்வதுமற்றும் சிறுபான்மை பாலீர்ப்பு உள்ளவர்களாக இருப்பது இன்றும் சமுதாயத்தில் சுலபமானது அல்ல. சமுதாயம் என்னதான் சிறுபான்மை பாலினம் மற்றும் பாலீர்ப்பாளர்களைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தாலும் அவர்களைப் பற்றி ஏதோ பாவப்பட்டவர்களை பற்றி பேசுவது போன்ற பேச்சு தான் நிலவுகிறது. அவர்களை மற்றவர்களுக்கு சமமாக நடத்தும் மனப்பான்மை இன்று வரை இல்லை. எனக்கு தெரிந்த பல சிறுபான்மை பாலின மற்றும் பாலீர்ப்பாளர்கள் எப்படியாவது இதையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாடு போய்விடவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இப்படி இருக்க பாலினத்தை மாற்றிக்கொள்வது கூல் திங்க் (cool thing)  என்று அந்த மன நல நிபுணர் கூறியது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட பாலின மற்றும் பாலீர்ப்பு சிறுபான்மையினராக இருப்பது இன்று வரை கடினம் தான். 

 

மூன்றாவது முறையாக இன்று காலையில் ஒரு சமூக வலைதளத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. மக்கள் தொகை கணக்கெடுக்கும்போது நெட் ரீப்ரொடக்‌ஷன் ரேட் (Net reproduction rate) என்ற ஒரு குறியீடு உள்ளது. அதாவது ஒரு சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையும் தன் வாழ் நாளில் எத்தனை பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார் என்பது அந்த குறியீடு. இதில் பிறந்த பெண் குழந்தைகளில் எத்தனைப் பெண்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது பெண் என்றால் யார் என்ற விவாதம் வந்தது. பெண்ணுக்கான உடல் உறுப்புகள் உள்ளவர் தான் பெண்ணாதன்னைத் தானே பெண் என்று அடையாளப் படுத்திக்கொள்பவர் தான் பெண்ணாஆணுக்கான உடல் உறுப்புகள் கொண்ட ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் தன்னைத் தானே பெண்ணாக மாற்றிக்கொண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் அவர் பெண்ணாக கணக்கிடப்படுவாராஇதெல்லாம் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் யாவும் மிகத் தொலைவில் இல்லை. வெகு விரைவில் இதெல்லாம் நிஜமாகும் வாய்ப்புள்ளது. இதற்கான தயார் நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உள்ளதா என்பது சிந்திக்கவேண்டிய விஷயம். ஆங்கிலத்தில் இதை LGBTQIA + என்பார்கள். ஆங்கிலத்தில் உள்ள இந்த பாலின மற்றும் பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கு இணையான தமிழ் மொழி வார்த்தைகள் என்னமற்ற இந்திய மொழிகளில் இதற்கான வார்த்தைகள் உள்ளனவாதமிழக அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு பாலின மற்றும் பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான அகராதியை வெளியிட்டது. இது மிக முக்கியமான நடவடிக்கை. வார்த்தை இருந்தால் தானே அடையாளம் இருக்கும். ஆம் பாலினம் குறுத்தும் பாலீர்ப்பு குறித்தும் பேச்சு அதிகமாகியுள்ளது. இன்னும் ஆக்கப்பூர்வமான பேச்சு தேவைப்படுகிறது. பேசுவோம்! புரிந்துகொள்வோம்

Comments

Popular posts from this blog

What is poverty?

Decision to leave medical teaching

Rebuilding trust in communities