வார்த்தைகளைக் குறை; செயல்களை அதிகம் செய்
கோடைக் காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் வெப்ப நிலை ஏறுவது போலவே மக்களின் கோபமும் சற்று அதிகரித்துத் தான் தெரிகிறது. தினமும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இரயிலிலும் சரி , பேருந்திலும் சரி , கோபமான வார்த்தைகள் அதிகம் பரிமாரிக்கொள்ளப்படுகின்றன. சில நேரங்களில் கைகலப்பு கூட ஏற்பட்டுவிடுகிறது. இந்த கோடை காலக் கோபத்திற்கு நானும் எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல. இப்பொழுதெல்லாம் எனக்கும் சற்று கோபம் அதிகமாகத் தான் வந்துவிடுகிறது. நேற்று மருத்துவமனையில் கோபம் தாங்க முடியவில்லை. எங்காவது கோபம் பொங்கி வெடித்துவிடப் போகிறதே என்று சற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஓய்வு அறையில் கொஞ்சம் சில்லென்ற தண்ணீரை குடித்துக்கொண்டு ஒளிந்து கொண்டுவிட்டேன். 10-15 நிமிடங்களுக்குப் பின் தான் வெளியே வந்து மறுபடியும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தேன். நேற்று என் கோபத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள். காலையில் கிளம்பும் அவசரத்தில் தெரியாமல் தடியான ஒரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பிவிட்டேன். இரயிலிலும் , பேருந்திலும் சென்று மருத்துவமனையை அடையும் முன்பே வியர்த...